உகண்டா 19 வயதின்கீழ் அணியுடன் நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணி 231 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னோடியாக நடைபெற்ற முதலாவது பயிற்சிப் போட்டியில் அயர்லாந்தை இலகுவாக வீழ்;த்திய இலங்கை அணி, தற்போது அறிமுக நாடான உகண்டா 19 வயதின்கீழ் அணியையும் வீழ்த்தி அசத்தியுள்ளது.
கயானாவில் நேற்று (12) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் பதில் தலைவர் சமிந்து விக்ரமசிங்க முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 19 வயதின்கீழ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சமிந்து முதல் ஓவரின் 2ஆவது பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷெவோன் டேனியல் – சதீஷ ராஜபக்ஷ ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
- U19 உலகக் கிண்ணம்: முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி
- ‘மஹேல இணைவது எமக்கு கூடுதல் பலம்’ – அவிஷ்க
- இளையோர் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியுடன் இணையும் மஹேல
இந்த ஜோடி 96 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷெவோன் டேனியல் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துனித் வெல்லாலகே 16 ஓட்டங்களுடனும், பவன் பதிராஜ 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய சதீஷ ராஜபக்ஷ 90 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டார்.
தொடர்ந்து பின்வரிசையில் வந்த சனுக நிதர்ஷன (23) லியனகே மற்றும் யசிரு ரொட்றிகோ (32) ஆகியோரது பங்களிப்புடன் இலங்கை 19 வயதின்கீழ் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
உகண்டா 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோசப் பகுமா மற்றும் பஸ்கால் முருகை ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தினர்.
இதனையடுத்து 278 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா 19 வயதின்கீழ் அணி வீர்ரகள், இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 21.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.
உகண்டா அணியின் துடுப்பாட்டம் சார்பில் பிரையன் அசாபாவைத் தவிர (13) மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் துனித் வெல்லாலவே, 3 ஓவர்கள் பந்துவீசி ஓட்டமின்றி 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
இதுதவிர இலங்கை அணியின் வெற்றிக்கு தமது பந்துவீச்சு மூலம் யசிரு ரொட்றிகோ மற்றும் சமிந்து விக்ரமசிங்க ஆகிய வீரர்களும் தலா இரண்டு விக்கெட் வீதம் கைப்பற்றி தமது பங்களிப்பினை வழங்கினர்.
இப்போட்டியின் வெற்றியோடு, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் தாம் விளையாடிய 2 பயிற்சிப் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றியீட்டியது.
இதனிடையே, ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை (14) முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், போட்டித் தொடரின் முதல் நாளில் இலங்கை வயதின்கீழ் அணி, தமது முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணியை சந்திக்கவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை 19 வயதின்கீழ் அணி – 277/8 (50 – சதீஷ ராஜபக்ஷ 75*, ஷெவோன் டேனியல் 46, யசிரு ரொட்றிகோ 32, சனுக நிதர்ஷன லியனகே 23, ஜோசப் பகுமா 2/25, பஸ்கால் முருகை 2/63
உகண்டா 19 வயதின்கீழ் அணி – 46/10 (21.2) – பிரையன் அசாபா 13, துனித் வெல்லாலகே 4/0, யசிரு ரொட்றிகோ 2/6, சமிந்து விக்ரமசிங்க 2/5
முடிவு – இலங்கை 19 வயதின்கீழ் அணி 231 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<