ஜிம்பாப்வே தொடருக்கான உத்தேச இலங்கை குழாம்

Zimbabwe tour of Sri Lanka 2022

1125

சுற்றுலா ஜிம்பாப்வே அணிக்கெதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை உத்தேச குழாம் குறித்த விபரம் ThePapare.com இணையத்தளத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக தொடர்ச்சியாக விளையாடி வருகின்ற முன்னணி வீரர்கள் சிலர் உபாதை, கொரோனா தொற்று மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இதில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற எல்பிஎல் தொடரின் போது தொடைப் பகுதியில் உபாதைக்குள்ளாகினார். எனவே குறித்த உபாதையிலிருந்து பூரண குணமடையாத அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடுகின்றார்.

எனினும், தற்போது உபாதைக்கான சிகிச்சைகளை பெற்று வருகின்ற அவர், அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கு முன் குணமடைந்துவிடுவார் என நம்பப்படுகின்றது.

இதனிடையே, இறுதியாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த குறைந்தது 10 வீரர்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வனிந்து ஹஸரங்கவுடன் இலங்கை அணியின் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேராவும் காயம் காரணமாக ஜிம்பாப்வே  அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அதே நேரத்தில் சக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் அவருக்கும் ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணியின் உப தலைவரான தனஞ்சய டி சில்வா தனிப்பட்ட காரணங்களுக்காக ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோல, அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த பானுக்க ராஜபக்ஷவும் இலங்கை அணியில் இடம்பெறவில்லை.

இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த லஹிரு குமார, அகில தனஞ்சய, லஹிரு மதுஷங்க, புலின தரங்க மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகிய 5 கிரிக்கெட் வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக ThePapare.com இணையத்தளத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே, குறித்த வீரர்களுக்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர்களான கலன பெரேரா, நுவன் துஷார மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோருடன், இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கமில் மிஷாரவும் முதல் முறையாக இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதனிடையே, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல மீது விதிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிதடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கும் இலங்கை அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இறுதியாக 2019 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடிய சுழல் பந்துவீச்சாளரான ஜெப்ரி வெண்டர்சே, மீண்டும் இலங்கை அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இதேவேளை, அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் கடந்த மாத இறுதியில கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்போது பூரண குணமடைந்துள்ளனர். எனினும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க அவர்கள் உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று அல்லது நாளை அணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகின்றது.

ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை உத்தேச குழாம் விபரம்:

தசுன் ஷானக (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால், சரித் அசலங்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், மினோத் பானுக, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, சாமிக்க குணசேகர, கலன பெரேரா, நுவன் துஷார

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<