சுற்றுலா ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால், இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான உப தலைவர் தனன்ஜய டி சில்வா விலகியுள்ளார்.
தனன்ஜய டி சில்வாவின் மனைவி கடந்தவார இறுதியில் தன்னுடைய முதல் குழந்தையை பிரசவித்திருப்பதன் காரணமாக, இலங்கை கிரிக்கெட் சபையிடம் தனன்ஜய டி சில்வா விடுமுறையை கோரியுள்ளார்.
>> கொவிட்-19 காரணமாக ஜிம்பாப்வே தொடரிலிருந்து ஜனித் லியனகே நீக்கம்
சகலதுறை வீரரான தனன்ஜய டி சில்வா குழாத்திலிருந்து வெளியேற தீர்மானித்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸை தேர்வுக்குழுவினர் அணியில் இணைத்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியை பொருத்தவரை கொவிட்-19 தொற்று காரணமாக அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது தனன்ஜய டி சில்வாவும் அணியிலிருந்து விலகியுள்ளார்.
சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி சுப்பர் லீக் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகின்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் 18 மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், குறித்த மூன்று போட்டிகளும் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உத்தேச குழாம்
தசுன் ஷானக (தலைவர்), தினேஷ் சந்திமால், சரித் அசலங்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், மினோத் பானுக, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப், நுவான் துஷார, சாமிக்க குணசேகர, கலன பெரேரா
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<