இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்டிவெல்ல ஆகியோருக்கு ஒருவருட காலம் தடைவிதிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் தடைக்கு முகங்கொடுத்திருக்கும் இவர், குறித்த இந்த தடைக்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்க மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிகமான கவனத்தை செலுத்தும் முகமாகவும், உடற்தகுதியை சிறப்பாக பேணும் முகமாகவும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள போதும், இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட உள்ளூர் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தனுஷ்க குணதிலக்க இலங்கை அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளதுடன், 2 அரைச்சதங்கள் அடங்கலாக 299 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். அத்துடன், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியை பொருத்தவரை கடந்த சில நாட்களில் அஞ்செலோ பெரேரா மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த நிலையில், தற்போது தனுஷ்க குணதிலக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<