அயர்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக ஹெய்ன்ரிச் மலன் நியமனம்

Ireland Cricket

368

அயர்லாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் ஹெய்ன்ரிச் மலன் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து கிரேம் போர்ட் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக ஹெய்ன்ரிச் மலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி கொக்கின் ஓய்வு குறித்து ஹஷிம் அம்லா கருத்து பகிர்வு

இவர் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து அயர்லாந்து அணியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று வருட ஒப்பந்தத்தின் கீழ் அணியுடன் பணியாற்றவுள்ளார்.

ஹெய்ன்ரிச் மலன் தென்னாபிரிக்க அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டாலும், 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். முதற்தர போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை விட, 11 வருடங்களாக இவர் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

குறிப்பாக நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவின் முதற்தர அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், நியூசிலாந்து சென்ரல் டிஸ்ட்ரிக் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும், நிகழ்வு பணிப்பாளராகவும் ஆறு வருடங்கள் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹெய்ன்ரிச் மலன், “அயர்லாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதையிட்டு பெருமையடைகிறேன். அயர்லாந்து குழாத்தில் உலகத்தரத்தில் போட்டியை வெளிப்படுத்தக்கூடிய வீரர்கள் உள்ளனர். இதுவொரு உற்சாகமான சவால் என்பதுடன், நாம் ஒரு குடும்பமாக முன்னேறுவதை எதிர்பார்க்கிறோம்.

இந்த அணியை உருவாக்கியதற்கான அதிகமான மதிப்பினை கிரேம் போர்டுக்கு கொடுக்கவேண்டும். அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக பணியை செய்துள்ளார். எமக்கான சிறந்த அடித்தளம் இருக்கிறது. அதனை சரியாக எதிர்காலத்தில் கட்டியமைக்க எதிர்பார்க்கிறோம்”  என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<