டி கொக்கின் ஓய்வு குறித்து ஹஷிம் அம்லா கருத்து பகிர்வு

2186
Getty Image

குயிண்டன் டி கொக் டெஸ்ட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வுபெற்றது தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வரிசையை மேலும் பலமிழக்க வைத்துள்ளது என தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹஷிம் அம்லா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவருடைய ஓய்வு தென்னாபிரிக்காவுக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுக்கும் எனவும் அவர் கூறினார்.

தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

இதில் செஞ்சூரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாபிரிக்க அணி சந்தித்த முதல் டெஸ்ட் தோல்வி இதுதான்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த குயிண்டன் டி கொக்

இந்த நிலையில், இப்போட்டி முடிந்தவுடன் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குயிண்டன் டி கொக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பானது ரசிகர்கள் அனைவர்க்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, குயிண்டன் டி கொக்கின் ஓய்வு குறித்து தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஹஷிம் அம்லா கூறுகையில்,

”டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து குயிண்டன் டி கொக் ஓய்வு பெற்றது தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வரிசையை தற்போது பலமிழக்க வைத்துள்ளது. ஏனெனில், மத்திய வரிசையில் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர்தான் அணிக்கு வலுசேர்க்கும் வகையில் விளையாடி வந்தனர்.

ஆனால், தற்போது அவரும் ஓய்வுபெற்று விட்டதால் இனி பவுமா தான் சற்று முன்சென்று விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு தற்போதுள்ள அணியில் எய்டன் மார்க்ரம், டீன் எல்கர் மற்றும் டெம்பா பவுமா ஆகியோரை தவிர மற்ற அனைத்து இளம் வீரர்களும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு எதிராக சரியான போட்டியை அளிக்கமுடியும்” என்று அவர் கூறினார்.

இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி

அத்துடன் பலம் மிக்க இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்த அம்லா, ”இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்கும். இதன் காரணமாக இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தென்னாபிரிக்க அணி தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜொஹனன்ஸ்பர்க்கில் நடைபெறுகின்ற இரண்டாவது டெஸ்ட் தென்னாபிரிக்க அணி நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால், ஜொஹனன்ஸ்பர்க் மைதானத்தில் எமது வீரர்கள் பலமாக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மேலும், அணியின் மத்திய வரிசையில் டெம்பா பவுமா சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்” என்று என ஹஷிம் அம்லா தெரிவித்துள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<