தென்னாபிரிக்க அணியின் முன்னணி விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான குயிண்டன் டி கொக், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சுற்றுலா இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் போட்டி நிறைவுபெற்றுள்ளதுடன், இந்த போட்டியில் இந்திய அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.
>>பாகிஸ்தானை வீழ்த்தி U19 ஆசியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை!
முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 24 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 21 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் பெற்றிருந்தார். இந்தநிலையில், முதல் போட்டி நிறைவடைந்த பின்னர், குடும்பத்துடன் அதிகமான நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக குயிண்டன் டி கொக் அறிவித்தார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவை இலகுவாக எடுத்துவிடவில்லை. சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து எந்த விடயத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில், எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட தீர்மானித்துள்ளேன். குறிப்பாக, நான் மற்றும் எனது மனைவி ஆகியோர் எமது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறோம். எனக்கு அனைத்தும் எனது குடும்பம்தான். எனவே, இந்த உற்சாகமான தருணத்தில் எனது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்” என்றார்.
அதேநேரம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட தயாராக இருப்பதாக குயிண்டன் டி கொக் மேலும் சுட்டிக்காட்டினார்.
“தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் அனைத்தும் முடியவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாட முழு ஈர்ப்புடன் உள்ளேன். எனது திறனால் எதிர்காலத்தில் நாட்டுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க காத்திருக்கிறேன்” என்றார்.
குயிண்டன் டி கொக் தென்னாபிரிக்க அணிக்காக, 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 6 சதங்கள் மற்றும் 22 அரைச்சதங்கள் அடங்கலாக 3300 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<