JVL இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அரியாலை கில்லாடிகள்!

Jaffna Volleyball League 2021

321
JVL

யாழ். மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஜப்னா வொலிபோல் லீக் (JVL) கரப்பந்தாட்ட தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் வெற்றிபெற்ற, அரியாலை கில்லாடிகள் 100 அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அரியாலை கில்லாடிகள் அணி, தங்களுடைய முதல் குவாலிபையர் போட்டியில், ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் நேற்றைய தினம் இரண்டாவது குவாலிபையர் போட்டியில், ரைஸிங் ஐலண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.

>>பங்களாதேஷை வீழ்த்தி சம்பியனாகிய இலங்கை கரப்பந்தாட்ட அணி

ரைஸிங் ஐலண்ட்ஸ் அணியானது எலிமினேட்டர் போட்டியில், சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி அணியை வீழ்த்தி, இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

அந்தவகையில், நேற்று (28) இரவு நடைபெற்ற இந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் அரியாலை கில்லாடிகள் மற்றும் ரைஸிங் ஐலண்ட்ஸ் அணியினர் மிக பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகிய இந்த போட்டியின் முதல் செட்டில், அரியாலை கில்லாடிகள் அணி, 25-14 என இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. ஆனாலும் அடுத்த இரண்டு செட்களிலும் ரைஸிங் ஐலண்ட்ஸ் அணியினர் கடுமையான போட்டியை கொடுத்தனர். இதில், இரண்டாவது செட்டை 25-23 எனவும்,  மூன்றாவது செட்டை 25-20 என்ற அடிப்படையிலும் ரைஸிங் ஐலண்ட்ஸ் அணியினர் கைப்பற்றி 2-1 என்ற செட்கள் கணக்கில் முன்னிலையை பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நான்காவது செட்டில் வெற்றிபெற்றால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு என்ற அடிப்படையில் ரைஸிங் ஐலண்ட்ஸ் அணி களமிறங்கியிருந்தாலும், அரியாலை கில்லாடிகள் அணி 25-20 என குறித்த செட்டை கைப்பற்றி போட்டியை 2-2 என சமப்படுத்தியது.

இறுதியாக போட்டியை தீர்மானிக்கக்கூடிய ஐந்தாவதும் இறுதியுமான செட்டில் ரைஸிங் ஐலண்ட்ஸ் அணியினர் 11 புள்ளிகள் வரை முன்னிலை வகித்திருந்த போதும், அதன் பின்னர் அபாரம் காட்டிய அரியாலை கில்லாடிகள் அணி 15-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

அதன்படி, இந்த போட்டியில் வெற்றிபெற்ற அரியாலை கில்லாடிகள் மற்றும் ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் நாளைய மறுதினம் (31) பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<