இன்னிங்ஸ் தோல்வியுடன் ஆஷஸ் கிண்ணத்தை பறிகொடுத்த இங்கிலாந்து

262
Getty Images

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2021-22 பருவகாலத்திற்கான  வெற்றியாளர்களாக, ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் இங்கிலாந்தினை வீழ்த்தியிருக்கும் அவுஸ்திரேலிய அணி மாறியிருக்கின்றது.

BPL தொடரில் ஒன்பது இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு

ஆஷஸ் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்க, தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரினை 3-0 எனக் கைப்பற்றியே அவுஸ்திரேலியா ஆஷஸ் தொடரின் வெற்றியாளர்களாக மாறியிருக்கின்றது.

அதேநேரம் இந்த பருவகாலத்திற்கான ஆஷஸ் வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி 2017ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கிண்ணத் தொடரினை தக்கவைத்துக் கொள்கின்றது.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, “பொக்சிங் டே (Boxing Day)” மோதலாக கடந்த சனிக்கிழமை (26) ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்தினை முதலில்  துடுப்பாட பணித்திருந்ததுடன் முதலில் துடுப்பாடிய அவ்வணி 182 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிற்காகப் பெற்றது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 50 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, அவுஸ்திரேலிய பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் மற்றும் நதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் ஜீவன் மெண்டிஸ்

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 267 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸில் எடுத்தது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்பவீரரான மார்கஸ் ஹர்ரிஸ் 76 ஓட்டங்களோடு தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் எடுத்த வீரராக மாற, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜேம்ஸ் அன்டர்சன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் 82 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, மிக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு 68 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.

இங்கிலாந்து அணிக்கெதிராக அபாரமாக செயற்பட்ட அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஸ்கொட் போலண்ட் வெறும் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தன்னுடைய மிகச் சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்தார். மறுமுனையில் மிச்சல் ஸ்டார்க்கும் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 185 (65.1) ஜோ ரூட் 50, பேட் கம்மின்ஸ் 36/3, நதன் லயன் 36/3

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 267 (87.5) மார்கஸ் ஹர்ரிஸ் 76, ஜேம்ஸ் அன்டர்சன் 33/4

இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 68 (27.4) ஸ்கொட் போலன்ட் 7/6, மிச்சல் ஸ்டார்க் 29/3

முடிவு – அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் வெற்றி

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<