இளம் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நம்பிக்கை கொடுத்த LPL 2021

Lanka Premier League 2021

455

இலங்கையில் வெகுவிமர்சையாக நடைபெற்றுவந்த லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) இரண்டாவது பருவகால போட்டிகள், வியாழக்கிழமையுடன் (23) நிறைவுக்குவந்திருக்கும் நிலையில், நடப்பு சம்பியனான ஜப்னா அணி மீண்டும் இரண்டாவது தடவையாக  கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

கடந்த ஆண்டினைப்போன்று இந்த ஆண்டும் இறுதிப்போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, ஜப்னாவை சந்தித்திருந்த போதும், அவர்களால் மீண்டும் கிண்ணத்தை வெற்றிக்கொள்ள முடியவில்லை.

>>இரண்டாவது முறையாகவும் LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்

இந்த ஆண்டு போட்டித்தொடரை பொருத்தவரை, கடந்த ஆண்டை விடவும் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றதுடன், ரசிகர்கள் நேரடியாக சென்று போட்டிகளை காணக்கூடிய வாய்ப்புகள் கிடைத்திருந்தன.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த LPL தொடர் இரண்டு மைதானங்களில் நடைபெற்றது. லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற, பிளே-ஓஃப் மற்றும் இறுதிப்போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றன.

தொடரின் வீரர்கள் வரைவிலிருந்து இலங்கையின் முன்னணி வீரர்கள் தெரிவுசெய்யப்படாத விடயம் ஆரம்பத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், பின்னர் குறித்த விடயங்கள் சரிசெய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் LPL தொடர் மீதான விருப்பம் ரசிகர்கள் மத்தியில் குறைந்திருந்த போதும், போட்டிகள் சூடுபிடிக்க, ரசிகர்களின் வருகையும், ஆதரவும் வெகுவாக அதிரித்திருந்தது.

ரசிகர்களின் ஈடுபாடு அதிகரித்திருந்தமையை இறுதிப்போட்டியில் எம்மால் நேரடியாக காணமுடிந்திருந்தது. குறிப்பாக, இறுதிப்போட்டிக்காக 17 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த நிலையில், அனைத்து டிக்கெட்டுகளும்  விற்பனையாகியிருந்தமையை காண முடிந்திருந்தது.

ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புகளை வீணாக்காத முறையில் போட்டிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பான போட்டிகளாக அமைந்திருந்தன. சுப்பர் ஓவர் வரை போட்டிகள் செல்லாவிட்டாலும், இலங்கை வீரர்களின் பிரகாசிப்பு, வெளிநாட்டு வீரர்களின் பிரகாசிப்பு, இளம் வீரர்களுக்கான வாய்ப்பு என்ற அடிப்படையில் தொடர் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

அதுமாத்திரமின்றி பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இறுதி லீக் போட்டிவரை காணக்கூடியதாக இருந்ததில், கொழும்பு அணி தங்களுடைய வாய்ப்பினை, கண்டி அணியிடமிருந்து பறித்துக்கொண்டது. எனினும், போட்டித்தொடரின் வரைவிலிருந்து,  கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் பலம் வாய்ந்த அணிகளாக அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டிவரை போட்டியிட்டு, இதனை உண்மையாக்கியிருந்தன.

வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு

LPL தொடரை பொருத்தவரை ஒரு பக்கத்தில் தொடரை தாங்கிப்பிடித்திருந்ததில், வெளிநாட்டு வீரர்களின் பங்களிபு்பு மிக முக்கியமானதாகும். கொவிட்-19 மற்றும் ஏனைய உயிரியல் பாதுகாப்பு வலய சிக்கல்களை தாண்டியும் முன்னணி வீரர்கள் இம்முறை விளையாடியிருந்தனர்.

அதிகமான வீரர்கள் பெயரளவில் இலங்கை ரசிகர்களிடத்தில் அறியாத வீரர்களாக இருந்த போதும், அவர்கள் அனைவரும் சர்வதேசத்தில் நடைபெறும் லீக் போட்டிகளில் ஆகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியவர்கள்.

இதில், முக்கியமாக குறிப்பிடவேண்டிய வீரர்கள் ஜப்னா கிங்ஸ் அணியின் டொம் கொலர் கெட்மோர், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் ஆகியோர். ஆரம்பத்தில் இவர்கள் அறியப்படாத வீரர்களாக இருந்த போதும், தொடரின் நிறைவில் இலங்கை ரசிகர்களுக்கு நெருக்கமான வீரர்களாக மாறியுள்ளனர்.

இவர்களுடன் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியில் விளையாடிய பில் சோல்ட், இம்முறை தொடரின் மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை (301 ஓட்டங்கள்) பெற்றுக்கொண்டார். இவருடன், உலகக்கிண்ணத்தில் அசத்திய அயர்லாந்தின் ஜோஸ் லிட்ல், ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லாஹ் ஷட்ரான், தென்னாபிரிக்காவின் மார்ச்சண்ட்  டி லேங் ஆகியோரும் பிரகாசித்திருந்தனர்.

அதுமாத்திரமின்றி கொழும்பு கிங்ஸ் அணியில் விளையாடிய டொம் பெண்டன், நவீன் உல் ஹக், கோல் கிளேடியேட்டர்ஸில் விளையாடிய நூர் அஹ்மட், பென் டன்க், கண்டி வொரியர்ஸ் அணியில் விளையாடிய கெனார் லிவிஸ், ரோவ்மன் பவல் மற்றும் டொம் மூர்ஸ் போன்ற வீரர்களின் பெயர்கள் அதிகமாக இலங்கையில் பேசப்படாவிட்டாலும், சர்வதேச T20 லீக்குகளின் அதிகமாக பேசப்படும் வீரர்கள்.

இவர்களை தாண்டி சர்வதேச அனுபவத்தை கொண்டுவந்திருந்த சில வீரர்களை குறிப்பிட்டே ஆகவேண்டும். பாகிஸ்தானைச் சேர்ந்த சொஹைப் மலிக், வஹாப் ரியாஷ், மொஹமட் ஹபீஸ், அன்வர் அலி ஆகிய வீரர்கள் மிகச்சிறந்த சர்வதேச அனுபவத்தை கொண்டுள்ள வீரர்கள்.

அனுபவத்தில் மாத்திரமின்றி தொடரில் முக்கியமான நேரங்களில் சிறந்த பிரகாசிப்புகளையும் வழங்கியிருந்தனர். அதேநேரத்தில், தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹீர், இங்கிலாந்தின் ரவி பொப்பாரா மற்றும் சமித் பட்டேல் ஆகியோர் இந்த தொடரில் தங்களுடைய அணிகள் எத்தகைய பலத்தை கொடுத்தார்கள் என்பதை பார்க்க முடிந்தது. சமித் பட்டேல் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் முதலிடத்தை, மஹீஷ் தீக்ஷனவுடன் பகிர்ந்துக்கொண்டதுடன், இம்ரான் தாஹீர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

குறிப்பாக இம்ரான் தாஹீர் பிரகாசிப்பில் மாத்திரமின்றி, தன்னுடைய அனுபவங்களையும் இளம் வீரர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். இதில், விஜயாகாந்த் வியாஸ்காந்த் போன்ற வீரர்களுக்கு இவர் அறிவுரை வழங்கியதை நேரடியாக காணமுடிந்திருந்தது. எனவே, சமித் பட்டேல் மற்றும் இம்ரான் தாஹீர் போன்ற வீரர்களிடம் இலங்கை அணியின் இளம் வீரர்களுக்கு கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இருந்தன.

எனவே, இந்த LPL தொடரில் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு இலங்கை கிரிக்கெட்டுக்கும், LPL தொடருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியிருந்தமையை மறுக்க முடியாது.

இலங்கை வீரர்களின் பிரகாசிப்பு

இந்த LPL தொடரை பொருத்தவரையில், மூன்றுவிதமான வெவ்வேறு சூழ்நிலையில் உள்ள இலங்கை வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கக்கூடிய தொடராக அமைந்திருந்தது.

முதலில் இலங்கை கிரிக்கெட்டின் தடைக்கு முகங்கொடுத்திருந்த குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரும், அஞ்செலோமெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சீகுகே பிரசன்ன போன்றோரும் மீண்டும் தங்களுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த தொடரில் களமிறங்கியிருந்தனர்.

அந்த அடிப்படையில் தங்களுடைய இலக்குக்கான சரியான அடித்தளத்தை இந்த தொடரில் சில வீரர்கள் சிறப்பாக நிறைவேற்றியிருந்தனர். குறிப்பாக குசல் மெண்டிஸ் 6 மாதத்திற்கு பின்னர் போட்டிகளில் விளையாடியிருந்த போதும், இம்முறை LPL தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பதிவுசெய்து 10 இன்னிங்ஸ்களில் 2 அரைச்சதங்கள் அடங்கலகா 327 ஓட்டங்களை குவித்தார்.

இவருடன் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக களமிறங்கியிருந்த தனுஷ்க குணதிலக்க, இறுதிப்போட்டியில் அதிரடி துடுப்பாட்டத்துடன் ஜப்னா கிங்ஸ் அணி வீரர்களது முகத்தில் அச்சத்தை விதைத்திருந்ததுடன், மொத்தமாக 10 இன்னிங்ஸ்களில் 2 அரைச்சதங்களுடன் 229 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனினும், நிரோஷன் டிக்வெல்ல சரியாக சிறப்பான பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

மறுமுனையில் உபாதைகளுக்கு மத்தியில் விளையாடிய அஞ்செலோ மெதிவ்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அரைச்சதம் கடந்ததுடன், பினிசராகவும் அரைச்சதம் கடந்திருந்தார். இவர் 191 ஓட்டங்களை 5 இன்னிங்ஸ்களில் மாத்திரம் பெற்றுக்கொள்ள, தினேஷ் சந்திமால் தன்னுடைய துடுப்பாட்டத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தி புதிய சந்திமாலாக, 9 இன்னிங்ஸ்களில் 277 ஓட்டங்களை குவித்திருந்தார். இதில், அவருடைய அதிரடி சிக்ஸர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

மறுபக்கம், சீகுகே பிரசன்ன பந்துவீச்சில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதுடன், கண்டி வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய அதிரடியையும் காட்டியிருந்தார். தோல்வியின் விளிம்பிலிருந்து கொழும்பு அணிக்கு, வெறும் 6 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்களை பெற்று, வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். இது மிகச்சிறந்த T20 இன்னிங்ஸ்களில் ஒன்றாகவும் பதிவாகியது. அந்தவகையில், அனுபவ வீரர்கள் மீண்டும் அணிக்குள் நுழைவதற்கான களத்தையும் இந்த LPL உருவாக்கியிருந்தது.

இரண்டாவதாக, ஏற்கனவே தேசிய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை சரியாக வெளிப்படுத்தி  தொடர்ந்தும் அணியில் இடத்தை தக்கவைப்பதற்கான தொடராகவும் அமைந்திருந்தது.

இதில் தேசிய அணியின் வீரர்கள் சிலர் மிகப்பெரிய பிரகாசிப்பை கொண்டுவராத போதும், அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த திறமையை வெளிப்படுத்தி மீண்டும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான போட்டியில் இணைந்துள்ளதுடன், மஹீஷ் தீக்ஷன, சரித் அசலங்க, துஷ்மந்த சமீர, வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன போன்ற வீரர்கள் தங்களுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளக்கூடிய திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த இரண்டு தரப்புகளுக்கும் அடுத்தப்படியாக முக்கியமான ஒரு அங்கமான இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் இமு்முறை LPL தொடரில் கிடைத்திருந்தன.  இளம் வீரர்கள் மாத்திரமின்றி திறமைகளை வெளிப்படுத்தியும் வாய்ப்பு கிடைக்காமலிருந்து சில வீரர்களும் இந்த LPL தொடரில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி 2 அரைச்சதங்களை பதிவுசெய்து, இம்முறை தொடரின் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்ற ஜனித் லியனகே, இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தாலும் அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய விஜயகாந்த் வியாஸ்காந்த், மாலிங்க பாணியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திவரும் வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷார, கண்டி வொரியர்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான சச்சிந்து கொலம்பகே மற்றும் நிமேஷ் விமுக்தி மற்றும் தம்புள்ள அணியின் இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய தரிந்து ரத்நாயக்க போன்ற வீரர்கள் இந்த ஆண்டு LPL தொடரில் கண்டறியப்பட்ட முக்கிய வீரர்களான மாறியுள்ளனர்.

எனவே, இவ்வாறு இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள், இலங்கை கிரிக்கெட்டுக்கான எதிர்காலம் என்ற அடிப்படையில் இம்முறை LPL தொடரானது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய ஊன்றுகோளாக அமைந்துள்ளது. அதுமாத்திரமின்றி, அனுபவ வீரர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் சர்வதேச அனுபவத்தை கொடுத்த ஒரு போட்டித்தொடராகவும் இந்த LPL தொடர் அமைந்திருந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அந்தவகையில், இம்முறை LPL தொடரானது இலங்கை கிரிக்கெட்டின் வீரர்களுக்கு மாத்திரமின்றி, நீண்ட இடைவேளைக்கு பின்னர் நேரடியாக கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் பார்கக்ககூடிய வாய்ப்பையும், கிரிக்கெட்டை நேரடியாக ரசிப்பதற்கான வாய்ப்பையும் கொடுத்திருக்கின்றது. ஆகவே, அடுத்த பருவகாலத்தில் LPL தொடரானது, இலங்கையின் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவாக அமையும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த LPL தொடர் விட்டுச்சென்றிருக்கிறமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<