ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இளையோர் ஆசிய கிண்ணத்தொடரில், குவைத் அணிக்கு எதிரான தங்களுடைய முதல் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை U19 அணி 274 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணிக்கு துடுப்பாட்ட வீரர்களிடமிருந்து மிகச்சிறந்த பங்களிப்பு கிடைத்திருந்தது.
>>இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு பலத்த போட்டி!
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சமிந்து விக்ரமசிங்க மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோர் அரைச்சதம் கடக்க, மத்தியவரிசையில் பவன் பதிராஜ மற்றும் ரனுத சோமரத்ன ஆகியோரும் அரைச்சதம் கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தனர்.
மொத்தமாக இந்த போட்டியில் இலங்கை வீரர்கள் நான்கு அரைச்சதங்களை பதிவுசெய்திருந்தனர். இதில், சமிந்து விக்ரமசிங்க மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோர் தலா 54 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, தன்னுடைய சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை தொடர்ந்து வெளிக்காட்டிவரும் பவன் பதிராஜ 14 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டு, 72 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்றார். இதில் இறுதிவரை களத்திலிருந்து துடுப்பெடுத்தாடிய ரனுத சோமரத்ன 60 ஓட்டங்களை பெற்றார்.
இவர்களுடன் துடுப்பாட்டத்தில் பங்களிப்பு வழங்கிய சதீஷ ராஜபக்ஷ 35 ஓட்டங்களையும், அணித்தலைவர் துனித் வெல்லாலகே 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 323 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. குவைத் அணியின் பந்துவீச்சில் ஷீஷான் ஹஸீம் மற்றும் ஹபீர் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடினமான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய குவைத் அணி முதல் 5 ஓவர்களில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டதுடன், விக்கெட்டிழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இருப்பினும், இலங்கை அணியின் தலைவர் துனித் வெல்லாலகே மற்றும் சதீஷ ராஜபக்ஷ ஆகியோரின் சுழலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த குவைத் U19 அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 49 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியினை சந்தித்தது.
குவைத் அணிசார்பாக மீட் பவ்ஸர் 25 ஓட்டங்களையும், ஜூட் கிரிஸ்டோபர் 12 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர். இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுகளையும், சதீஷ ராஜபக்ஷ 3 விக்கெட்டுகளையும், மதீஷ பதிரண 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இளையோர் ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியில் வெற்றியினை பதிவுசெய்திருக்கும் இலங்கை இளையோர் அணி, தங்களுடைய அடுத்த போட்டியில் நேபாளம் அணியை எதிர்வரும் 26ம் திகதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
- இலங்கை U19 அணி – 323/5 (50), பவன் பதிராஜ 86, ரனுத சோமரத்ன 60*, சமிந்து விக்ரமசிங்க 54, ஷெவோன் டேனியல் 54, ஷீஷான் ஹஸீம் 2/49, ஹபீர் அலி 2/50
- குவைத் U19 அணி – 49/10 (17.4), மீட் பவ்ஸர் 25, துனித் வெல்லாலகே 4/2, சதீஷ ராஜபக்ஷ 3/4, மதீஷ பதிரண 2/7
- முடிவு – இலங்கை U19 அணி 274 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<