இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கான, ஆறு பேர்கொண்ட குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர்களுக்கான விண்ணப்பங்களை இலங்கை கிரிக்கெட் சபை கோரியிருந்த நிலையில், விண்ணப்ப முடிவு திகதி கடந்த 14ம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. அதன்படி, தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 30 பேர் விண்ணப்பத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
>>அயர்லாந்தை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா
அதேநேரம், தலைமை பயிற்றுவிப்பாளரை நியமிப்பதற்கான குழுவில், இலங்கை கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர்கள் இருவர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அத்துடன், இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன, ஆலோசனை குழு தலைவர் அரவிந்த டி சில்வா, கிரிக்கெட் பணிப்பாளர் டொம் மூடி, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பத்துள்ளவர்களில் தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் லான்ஸ் குழூஸ்னர் (முன்னாள் ஆப்கானிஸ்தான் பயிற்றுவிப்பாளர்), மே.தீவுகளின் முன்னாள் வீரர் கோர்ட்னி வோல்ஸ் (முன்னாள் பங்களாதேஷ் பயிற்றுவிப்பாளர்), முன்னாள் நியூசிலாந்து வீரர் கிராண்ட் பிரெட்போர்ன் உள்ளிட்டோரும் விண்ணப்பத்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே தொடருக்கு முன்னர் பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. இல்லையெனில் ஜிம்பாப்வே தொடருக்காக இடைக்கால பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது, எதிர்வரும் 7 அல்லது 8ம் திகதிகளில் இலங்கை வரவுள்ளதுடன், ஐசிசி சுப்பர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 16 தொடக்கம் 21ம் திகதிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<