இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனைகளின் தரநிலைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளதாக எமது இணையத்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது.
அதன்படி, இரண்டு கிலோ மீற்றர் தூரம் ஓடுதல் மற்றும் ஸ்கின்-போல்ட் போன்ற உடற்தகுதி பரிசாதனைகள் மேலும் கடினமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உடற்தகுதி பரிசோதனையானது, இலங்கை கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தை பெற்றுள்ள 60 வீரர்களுக்கும் முன்னெடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் உடற்தகுதி செயல்திறன் மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை வீரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு கிலோ மீற்றர் தூரம் ஓடுதல் பரிசோதனையை 8 நிமிடம் மற்றும் 35 செக்கன்கள் செக்கன்களில் கடக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள பரிசோதனையில், இந்த தூரத்தை 8 நிமிடங்கள் மற்றும் 10 செக்கன்களில் நிறைவுசெய்யவேண்டும். அதுமாத்திரமின்றி, ஸ்கின்-போல்ட் பரிசோதனைக்கு கடந்த ஆண்டு அளவு வரையறை 80 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 70 ஆகு குறைக்கப்படவுள்ளது.
அவிஷ்கவின் கன்னி சதத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜப்னா கிங்ஸ்
இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க சண்டே டைம்ஸ் ஊடகத்துக்கு கருத்து வெளியிடுகையில்,
“உடற்தகுதி என வரும் போது, வீரர்களிடமிருந்து எந்த தன்னிறைவும் இல்லை. வீரர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடையவேண்டும். அதற்காகவே, இந்த உடற்தகுதி வரையறையை நடைமுறைப்படுத்தவுள்ளோம். உடற்தகுதியை நாம் அவதானிப்பதுடன், வீரர்களின் திறன்களையும் ஆராய்ந்து அவர்கள் விளையாட தயாராக இருக்கின்றார்களா? என்பதையும் கவனத்தில் கொள்வோம்” என்றார்.
உடற்தகுதி பரிசோதனை மற்றும் பிரகாசிப்புக்கு ஏற்ற ஒப்பந்தங்கள் வழங்குவது போன்ற அறிவிப்புகளை இலங்கை கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்தியதிலிருந்து, வீரர்களின் உடற்தகுதி வெகுவிரைவாக அதிகரித்துவந்திருந்தது. அதன்படி, தேசிய அணிக்கு மாத்திரம் அல்லாமல் இலங்கை A அணி மற்றும் U19 அணிகளில் உள்வாங்கப்படும் வீரர்களுக்கும் இந்த உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நான்கு உடற்தகுதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், முதல் உடற்தகுதி பரிசோதனை ஜனவரி 7ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<