பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராகும் ரங்கன ஹேரத்

1291

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக செயற்பட்டுவந்த, இலங்கையின் சுழல் ஜாம்பவான் ரங்கன ஹேரத் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆறுதல் வெற்றியுடன் இளையோர் ஒருநாள் தொடரினை நிறைவு செய்த இங்கிலாந்து

அந்தவகையில் ரங்கன ஹேரத் 2023ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரை, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்படுவார் என அந்த நாட்டின் கிரிக்கெட் சபை (BCB) வெளியிட்ட ஊடக அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக ரங்கன ஹேரத் செயற்பட்டுவந்திருந்தார்.

ஜிம்பாப்வே தொடரினை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி விளையாடியிருந்த நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான T20 தொடர்களிலும் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக கடமை புரிந்திருந்த ரங்கன ஹேரத், அதன் பின்னர் 2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தொடரிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் மாறியிருக்கும் அவர், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் சுழல்பந்துவீச்சுப் பயிற்சியாளராக தனது பணியினை புதிதாக ஆரம்பிப்பார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

ரங்கன ஹேரத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய இடதுகை சுழல்பந்துவீச்சாளராக இருப்பதோடு, சுழல்பந்துப் பயிற்சியாளர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் பயிற்சி நெறியினையும் (Level 3) பூர்த்தி செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம் – The Business Standard

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<