டாக்கா சர்வதேச மரதனில் பங்குபற்றும் மலையக வீரர்கள்

294

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆண் வீரர்களும், இரண்டு பெண் வீராங்கனைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதில் அண்மைக்காலமாக தேசிய மட்ட அரை மரதன் மற்றும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மலையக வீரர்களான முத்துசாமி சிவராஜன் மற்றும் வேலு கிரிஷாந்தினி ஆகிய இருவரும் பங்குபற்றவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

முன்னதாக கடந்த மே மாதம் கதிர்காமத்தில் நடைபெற்ற 46 ஆவது தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற வீரர்களை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, டாக்கா மரதன் ஓட்டப் போட்டிக்கு ஆண்கள் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட  இலங்கையைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன், கதிர்காமத்தில் நடைபெற்ற மரதன் போட்டியை 2 மணித்தியாலம் 29 நிமிடங்கள் 29 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஆரம்பத்தில் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்று வந்த அவர், முதல் முறையாக மரதன் ஓட்டத்தில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

31 வயதான சிவராஜன், அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டரில் 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க, 46 ஆவது தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான மரதன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வேலு கிரிஷாந்தினியும் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளார். குறித்த போட்டியை அவர் 2 மணித்தியாலயம் 55 நிமிடங்கள் 30 செக்கன்களில் நிறைவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

33 வயதான வேலு கிரிஷாந்தினி, அனுபவம் வாய்ந்த மரதன் ஓட்ட வீராங்கனை ஆவார், இறுதியாக அவர் 2019 ஆம் ஆண்டில் சீனா – மெக்காவு நாட்டில் நடைபெற்ற மரதன் போட்டியில் பங்குபற்றி 17 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும். 2017 ஆம் ஆண்டில் டுபாய் மற்றும் சீனாவின் கும்மின் நகரில் நடைபெற்ற இரண்டு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிய அவர், முறையே 15 மற்றும் 4 ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டரில் வெண்கலப் பதக்கம் வென்ற வேலு, கிரிஷாந்தினி, 5 ஆயிரம் மீட்டரில் 4 ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதனிடையே, டாக்கா மரதன் போட்டியில் சிவராஜன் மற்றும் வேலு கிரிஷாந்தினியுடன் திஸ்ஸ குணசேகர, வத்ஸலா ஹேரத் ஆகிய இரண்டு வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, டாக்கா மரதன் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மரதன் அணியின் பயிற்சியாளராக சஜித் ஜெயலால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முகாமையாளராக, என்.ஏ.டி. ஜயசிங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷின் தேச பிதாவான அமரர் முஜிபுர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களின் பங்குபற்றலுடன் இந்த மரதன் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<