இறுதி நிமிடத்தில் வெற்றியைத் தவறவிட்ட ரெட் ஸ்டார்ஸ்

Super League 2021

452

சுபர் லீக் கால்பந்து தொடரின் நான்காம் வாரத்திற்கான முதல் போட்டியாக இடம்பெற்ற கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ரெட் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவுற்றது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகளின்படி, ரெட் ஸ்டார்ஸ் வீரர்கள் 3 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையான முடிவுகளுடன் 7 புள்ளிகளைப் பெற்றிருந்தனர். கொழும்பு அணி வீரர்கள் 3 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (05) சுகததாஸ அரங்கில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணியினரும் கோல் பெறாதநிலையில் ஆட்டம் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 15 நிமிடங்களில் ரெட் ஸ்டார்ஸ் வீரர்களுக்கு கிடைத்த கோணர் வாய்ப்பை ரஹ்மான் பெற்றார். அவர் உதைந்த பந்து மைதானத்தின் எல்லையினால் சென்று, கோல் கம்பத்தில் பட்டு மீண்டும்s கொழும்பு அணி வீரர் அஹமட் சஸ்னியின் உடம்பில் பட்டு கோல் காப்பாளர் இம்ரானின் கைகளிலும் பட்டு கோலுக்குள் சென்றது. எனினும், சஸ்னி பந்து வெளியில் செல்லும் என்று விட்டதனாலேயே இந்த தவறு நடந்தது.

மீண்டும் 68 ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற அபுமெரெ தடுப்பு வீரர்களைத் தாண்டி பந்தை எடுத்துச் சென்று பெனால்டி எல்லையில் இருந்து எதிர் திசையில் தனியே முன்னோக்கி வந்த ரஹ்மானுக்கு பந்தை வழங்க, ரஹ்மான் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

எனினும், அடுத்த இரண்டு நிமிடங்களில் ஆகிப் எதிரணியின் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை புத்திக பெரேரா ஹெடர் மூலம் சர்வானுக்கு வழங்க, அவர் அதனை வலது காலிற்கு எடுத்து கோலின் வலது பக்கத்தினால் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி கொழும்பு கால்பந்து கழத்திற்கான முதல் கோலைப் பெற்றார்.

மீண்டும் போட்டியின் உபாதையீடு நேரத்தில் மைதானத்தின் ஒரு திசையில் இருந்து ஆகிப் உள்ளனுப்பிய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்த அஹமட் சஸ்னி பந்தை கோலாக்கி இறுதி நேரத்தில் ஆட்டத்தை 2-2 என சமப்படுத்தினார்.

எனவே, இறுதி நிமிடம் வரை முன்னிலையில் இருந்த ரெட் ஸ்டார்ஸ் அணிக்கு சஸ்னியின் இந்த கோல் அதிர்ச்சியாக இருந்தது.

முழு நேரம்: கொழும்பு கா.க 2 – 2 ரெட் ஸ்டார்ஸ் கா.க 

கோல் பெற்றவர்கள்

கொழும்பு கா.க –   சர்வான் ஜோஹர் 69‘, அஹமட் சஸ்னி 90+6’

ரெட் ஸ்டார்ஸ் கா.க  – மொஹமட் ரஹ்மான் 60‘ & 67‘

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<