சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதல் டெஸ்ட் போட்டியின், நான்காவது நாள் ஆட்டநேர நிறைவில், மே.தீவுகள் அணி 52 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டநேரம் மழைக்காரணமாக நிறுத்தப்பட, மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றிருந்தது.
>> LPL தொடரின் பங்காளராகும் டயலொக்
இன்றைய தினமும் மழைக்காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பமாகியது. இந்தநிலையில், மேலதிகமாக 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றநிலையில், மே.தீவுகள் அணி 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் 195 ஓட்டங்கள் முன்னிலையுடன் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின், பெதும் நிஸ்ஸங்க மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், திமுத் கருணாரத்ன மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சிறப்பாக ஓட்டங்களை குவித்தனர்.
இதில் திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 16 ஓட்டங்களையும் பெற, இலங்கை அணி மதியபோசன இடைவேளையின் போது, 2 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மதியபோசன இடைவேளைக்கு பின்னரும் சிறப்பாக ஆடிய மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று வேகமாக அதிகரிக்க முற்பட்டனர். இதன்போது, திமுத் கருணாரத்ன 27வது டெஸ்ட் அரைச்தத்தை பதிவுசெய்ய, அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய 37வது டெஸ்ட் அரைச்சதத்தை பதிவுசெய்தார்.
எனினும், துரதிஷ்டவசமாக திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களுடன் ரகீம் கொர்ன்வலின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தனன்ஜய டி சில்வா வந்த வேகத்தில், வொரிகனின் பந்துவீச்சில் ஒரு ஓட்டத்துடன் களத்திலிருந்து வெளியேறினார். இறுதியாக அஞ்செலோ மெதிவ்ஸ் 69 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களுடனும் களத்திலிருக்க, இலங்கை அணி 191 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது. அத்துடன், மே.தீவுகள் அணிக்கு 348 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மிகவும் கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய மே.தீவுகள் அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற தொடங்கியது. ரமேஷ் மெண்டிஸ் மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்த மே.தீவுகள் அணி 18 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து, ஜசூவா டி சில்வா மற்றும் குரூமா போனர் ஆகியோர் மே.தீவுகள் அணிக்காக நிதானமாக ஓட்டங்களை பெற்றனர். இதில், போனர் 18 ஓட்டங்களையும், ஜசூவா டி சில்வா 15 ஓட்டங்களையும் பெற்றிருந்த போது, ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில், ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதேவேளை, இன்றைய ஆட்டநேர நிறைவில் மே.தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், வெற்றிக்கு மேலும் 296 ஓட்டங்களை பெறவேண்டும். அதேநேரம், இலங்கை அணியின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் மாத்திரமே தேவைப்படுகிறது.
cURL Error #:Failed to connect to cricket-api.stats.thepapare.com port 443: Connection refused
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<