2027 ஒருநாள் உலகக் கிண்ண அணிகள் 14 ஆக அதிகரிப்பு

3605

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை 2024 முதல் 2031ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நடைபெறவுள்ள ஒருநாள், T20 மற்றும் சம்பியன்ஸ் கிண்ணம் உள்ளிட்ட போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ள நாடுகள் பற்றிய விபரங்களை அண்மையில் வெளியிட்டு இருந்தது.

இதில் 2027ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் சுவாரசியத்தைக் அதிகரிக்கும் வகையில் 2015இல் முன்னணி 10 அணிகளுடன் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றது.

அதன்படி, இறுதியாக 2019இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் மாத்திரமே பங்கேற்றதுடன், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திலும் 10 அணிகள் மாத்திரம் பங்கேற்க உள்ளன.

இந்த நிலையில் மீண்டும் 14 அணிகள் பங்குபற்றும் வகையில் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு ஐசிசி தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒருநாள் அணிகளின் தரவரிசையின் அடிப்படையில் 10 அணிகள் நேரடியாகப் பங்குபெறும். உலக அளவிலான தகுதிகாண் சுற்றின் அடிப்படையில் மேலும் 4 அணிகள் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும்.

இதன்மூலம் 2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்காக கடைப்பிடிக்கப்படும் ஒருநாள் சுப்பர் லீக் நடைமுறை முடிவுக்கு வரவுள்ளது.

மேலும் கடந்த 1999, 2003ஆம் ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட சுப்பர் சிக்ஸ் சுற்றை 2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் மீண்டும் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<