ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் வெற்றியை நோக்கி களமிறங்கும் இலங்கை

West Indies tour of Sri Lanka 2021

409

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான (2021-2023) தங்களுடைய முதல் டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டு விளையாடவுள்ளது.

குறித்த இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளைய தினம் (21) ஆரம்பமாகிறது.

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான மோதல்களில் இலங்கை அணி அதிகமான சாதகங்களை வைத்திருக்கிறது. குறிப்பாக இறுதியாக 2005ம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் விளையாடிய டெஸ்ட் தொடர்களில், மேற்கிந்திய தீவுகளிடம் இலங்கை அணி தோல்வியை சந்தித்திருக்கவில்லை.

இறுதியாக இரண்டு அணிகளும் மோதிய 5 டெஸ்ட் தொடர்களில் இலங்கை அணி, 2005 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களை வெற்றிக்கொண்டிருப்பதுடன், ஏனைய மூன்று டெஸ்ட் தொடர்களும் சமனிலையில் முடிவடைந்துள்ளன.

அதேநேரம், இரண்டு அணிகளும் 2018ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றிருந்த போதும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற இரண்டு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரில், எந்த வெற்றிகளும் பெறப்படவில்லை என்பதுடன், இரண்டு போட்டிகளும் சமனிலையில் முடிவடைந்தன.

அதுமாத்திரமின்றி 2001ம் ஆண்டிலிருந்து இரண்டு அணிகளும் இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் மோதியிருந்தாலும், இதுவரையில் ஒரு வெற்றியையும் இலங்கை மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணி பெறவில்லை. இரண்டு அணிகளும் 11 டெஸ்ட் போட்டிகளில், இலங்கையில் விளையாடியுள்ளதுடன், 7 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளதுடன், 4 போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளன. அத்துடன், காலி மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இலங்கை அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

இலங்கை அணி

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரின் பயிற்றுவிப்பின் கீழ், இறுதி டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடுகின்றது. இந்த தொடருடன், இவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுகிறார்.

இலங்கை அணியின் டெஸ்ட் பயணத்தை பொருத்தவரை, 2019ம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் பின்னர், பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை மாத்திரமே வெற்றிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடைப்பட்ட காலத்தில், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியதுடன், மே.தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை சமப்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும், இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிக்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு, இதுவொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ, பிரவீன் ஜயவிக்ரம, மினோத் பானுக, பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, ரொஷேன் சில்வா, சாமிக்க கருணாரத்ன, சுமிந்த லக்ஷான், துஷ்மந்த சமீர, சரித் அசலங்க, ஓசத பெர்னாண்டோ, லக்ஷான் சந்தன், சாமிக்க குணசேகர, லசித் எம்புல்தெனிய, கமில் மிஷார, ரமேஷ் மெண்டிஸ்

எதிர்பார்ப்பு வீரர்

இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார். இவர் கடந்த மே மாதம் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தாலும், இவரின் துடுப்பாட்ட திறமை இலங்கை அணிக்கு மிகச்சிறந்த பலமாகும்.

குறிப்பாக இறுதியாக இவர் விளையாடிய நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களில், 66, 118, 244 மற்றும் 75 என ஓட்டங்களை குவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் களமிறங்கினாலும், டெஸ்ட் போட்டிகளில் இவருடைய துடுப்பாட்ட திறமை

மிகவும் மதிப்பு வாய்ந்தது. குறிப்பாக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் போன்ற கடினமான ஆடுகளங்களிலும் ஓட்டங்களை சிறப்பாக பெறக்கூடியவர். எனவே, அனுபவ வீரர் என்ற ரீதியில் இவரது துடுப்பாட்ட ஆரம்பம் அணிக்கு மிகவும் முக்கியமாகும்.

மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் பிரகாசிப்புகளும், கடந்த காலங்களில் மிகவும் மோசமானதாகவே அமைந்திருந்தன. இறுதி 6 டெஸ்ட் தொடர்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை மாத்திரமே வெற்றிக்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது.

இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை மாத்திரம் 2-1 என இழந்துள்ள போதும், ஏனைய தொடர்களை முழுமையாக இழந்திருந்தது. குறிப்பிட்ட இந்த ஆறு தொடர்களில் வெறும் நான்கு டெஸ்ட் வெற்றிகளுடன் மாத்திரம் களமிறங்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்த தொடர் சவாலான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

கிரைக் பிராத்வைட் (தலைவர்), ஜேர்மைன் பிளக்வூட், குரூமா போனர், ரகீம் கொர்ன்வல், ஜேசன் ஹோல்டர், கெயல் மேயர்ஸ், ஜசூவா டி சில்வா, ஷெனொன் கேப்ரியல், கெமார் ரோச், ஜோமல் வரிகன், ரொஸ்டன் சேஸ், ஷேய் ஹோப், வீரசாமி பெருமாள், ஜெய்டன் சீல்ஸ், ஜெரமி சொலென்ஷோ

எதிர்பார்ப்பு வீரர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் எதிர்பார்ப்பு வீரராக அந்த அணியின் தலைவர் கிரைக் பிராத்வைட் உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக தொடர்ச்சியாக ஓட்டங்களை குவித்துவரும் வீரராக இவர் இருக்கிறார்.

Gettyimages

கிரைக் பிராத்வைட் இந்த ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில், 34.75 என்ற ஓட்ட சராசரியில், 556 ஓட்டங்களை குவித்துள்ளார். எனினும், இவர் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறினால், இது இலங்கை அணிக்கு சாதகமாக அமையும். துணைக்கண்டத்தில் இவரது ஓட்ட சராசரி 28 ஆக உள்ள நிலையிலும், இவர் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடினால், எதிரணிகளுக்கு மிகவும் சவாலாக

அமையும். எனவே, இந்த தொடரில் பிராத்வைட்டின் துடுப்பாட்டம் மேற்கிந்திய தீவுகளுக்கு முக்கியமான ஒன்றாகும்.

இறுதியாக…

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடர், இரண்டு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான தொடராகும். குறிப்பாக, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதல் தொடர் என்பதால், இரண்டு அணிகளும் சிறந்த ஆரம்பத்தை நோக்கி களமிறங்கும்.

அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரையில், இலங்கையில் டெஸ்ட் வெற்றியினை பெற்றிருக்கவில்லை. எனவே, இந்த பின்னடைவை நிவர்த்திசெய்ய வேண்டிய கட்டாயமும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உள்ளது. எவ்வாறாயினும், சொந்த மண்ணில் சுழல் பந்துவீச்சின் பலத்துடன் களமிறங்கும் இலங்கை அணிக்கு, இந்த தொடரில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<