கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்றார் ஏபி டி வில்லியர்ஸ்

513
AFP

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

37 வயதான டி வில்லியர்ஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதைத்தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக், பிக் பாஷ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற T20 லீக் தொடர்களில் மட்டும் அவர் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் இன்று அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது ஒரு நம்பமுடியாத பயணம், ஆனால் நான் அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது மூத்த சகோதரர்களுடன் நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் இந்த விளையாட்டை விளையாடினேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை’ என்று பதிவிட்டு, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இதன்காரணமாக அவர் அடுத்த ஆண்டு IPL தொடரில் விளையாடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன், இன்னும் சில வாரங்களில் IPL மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டி வில்லியர்ஸுக்குப் பதிலாக மற்றுமொரு வீரரை அணியில் தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, ஏபி டி வில்லியர்ஸின் ஓய்வு குறித்து பதிவிட்டுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி,

‘ஒரு சகாப்தத்தின் முடிவு! உங்களைப் போல் யாரும் இல்லை. ஏபி, RCBயில் நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம். அணிக்கும், ரசிகர்களுக்கும், பொதுவாக கிரிக்கெட் பிரியர்களுக்கும் நீங்கள் செய்து கொடுத்த அனைத்திற்கும் நன்றி ஏபி டி. இனிய ஓய்வுநாள், ஜாம்பவான்’ என்று பதிவிட்டுள்ளது.

IPL தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டெயார்டெவில்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக இதுவரை 184 போட்டிகளில் விளையாடி 5,162 ஓட்டங்களை டி வில்லியர்ஸ் குவித்துள்ளார். இதில் மூன்று சதங்கள், 40 அரைச்சதங்கள் மற்றும் 251 சிக்ஸர்கர்கள் அடங்கும்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<