சுற்றுலா பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் விளையாடவுள்ள 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>இளையோர் உலகக் கிண்ணம் 2022: சவாலான குழுவில் இலங்கை
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், அதன் பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவிருக்கின்றது.
இந்த சுற்றுப்பயணத்தில் பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகள் இடையிலான T20 தொடர் வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த T20 தொடரின் முதல் போட்டிக்கான பாகிஸ்தான் குழாமே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த பாகிஸ்தான் வீரர்கள் குழாத்தில் ஹய்தர் அலி, குஸ்தில் சாஹ், மொஹமட் நவாஸ் மற்றும் மொஹமட் வஸீம் Jr ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் பாகிஸ்தான் அணிக்காக T20 உலகக் கிண்ணத்தில் விளையாடியிருந்த அனுபவமிக்க சகலதுறைவீரரான மொஹமட் ஹபீஸ், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கான பாகிஸ்தான் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார். அதேநேரம் அதிரடி வீரரான ஆசிப் அலிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
>>ICC கிரிக்கெட் குழுவின் தலைவரானார் சௌரவ் கங்குலி
இவர்கள் தவிர பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்துறை அதன் தலைவர் பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் பகார் சமான் மூலம் பலப்படுத்தப்பட, அணியின் பந்துவீச்சுத்துறைக்கு சஹீன் அப்ரிடி, ஹஸன் அலி மற்றும் ஹரிஸ் ரவுப் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
அதேநேரம் பங்களாதேஷ் தொடரின் போதும் பாகிஸ்தான் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக சக்லைன் முஸ்தாக் செயற்பட, பந்துவீச்சுப்பயிற்சியாளராக வெர்னன் பிலாந்தரும் செயற்படவுள்ளார். எனினும் T20 உலகக் கிண்ணத்தின் போது பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்பட்ட மெதிவ் ஹெய்டேனுக்கு பங்களாதேஷ் தொடரில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பாகிஸ்தான் குழாம்
பாபர் அசாம் (அணித்தலைவர்), சதாப் கான், மொஹமட் ரிஸ்வான், பகார் சமான், ஹைதர் அலி, சொஹைப் மலிக், குஸ்தில் சாஹ், மொஹமட் நவாஸ், மொஹமட் வஸீம் Jr, ஹஸன் அலி, சஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவுப்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<