ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரு போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய குழாம் இன்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து குழாம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதலிரு டெஸ்ட் போட்டிக்கான டிம் பெய்ன் தலைமையிலான 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உஸ்மான் கவாஜா அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெற்றுள்ளார். 2019 இற்குப் பிறகு உஸ்மான் கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவில்லை. ஆனால் உள்ளூரில் நடைபெறுகின்ற ஷெபீல்ட் ஷீல்ட் தொடரில் அவர் அபாரமாக ஆடி வருவதால் ஆஷஸ் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, டிராவிஸ் ஹெட்டும் மத்திய வரிசையை பலப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இறுதி பதினொருவர் அணியில் யார் ஆடுவது என்பதில் உஸ்மான் கவாஜாவுக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.
- நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு
- T20 உலகக்கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது அவுஸ்திரேலியா
- ஏழு நகரங்களில் நடைபெறவுள்ள அடுத்த T20 உலகக் கிண்ணம்
மேலும் இந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், மார்னஸ் லபுச்சேன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
இதனிடையே, நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் ஆஷஸ் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
மாறாக, அவர் இங்கிலாந்துடன் நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியில் மோதும் அவுஸ்திரேலிய A அணியில் இடம்பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் மிட்செல் மார்ஷ் நடப்பாண்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் அசத்திய அவுஸ்திரேலியாவின் மற்றொரு ஹீரோவான மெதிவ் வேட் ஆஷஸ் தொடரில் இடம்பெறவில்லை
அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குழாம்
டிம் பெய்ன் (அணித்தலைவர்), பட் கம்மின்ஸ் (உப தலைவர்), கெமரூன் கிரீன், மார்கஸ் ஹரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுச்சேன், நதன் லயன், மைக்கல் நீசர், ஜெய் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வோர்னர், மிட்செல் ஸ்வெப்சன்
அவுஸ்திரேலியா A அணி
சீன் அபோட், அஸ்டன் அகார், ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஹென்றி ஹன்ட், ஜோஷ் இங்கிலிஸ், நிக் மெட்டின்சன், மிட்செல் மார்ஷ், மெட் ரென்ஷோ, மார்க் ஸ்டெகெட்டி, பிரைஸ் ஸ்ட்ரீட்.
டெஸ்ட் போட்டி அட்டவணை
- டிசம்பர் 8-12 பிரிஸ்பன் – முதல் டெஸ்ட்
- டிசம்பர் 16-20 அடிலெய்ட் ஓவல் – 2ஆவது டெஸ்ட்
- டிசம்பர் 26-30 மெல்போர்ன் பொக்சிங் டே டெஸ்ட் – 3ஆவது டெஸ்ட்
- ஜனவரி 5-9, சிட்னி – 4ஆவது டெஸ்ட்
- ஜனவரி 14-18, பெர்த் – 5ஆவது டெஸ்ட்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<