இரண்டாவது பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் போட்டிகளுக்காக (LPL 2021) புதுப்பொலிவுடன் தயாராகும் ஜப்னா கிங்ஸ் அணி, அதன் பயிற்சியாளர்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது.
>> T20 உலகக் கிண்ணத்திற்கான சிறந்த அணி அறிவிப்பு
அதன்படி இரண்டாவது பருவகாலத்திற்கான LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக திலின கண்டம்பி செயற்படவிருக்கின்றார். அதேநேரம், அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் மரியோ வில்லவராயன் செயற்படுகின்றார்.
திலின கண்டம்பி பயிற்றுவிப்பிலான ஜப்னா கிங்ஸ் அணி கடந்த ஆண்டு (2020) LPL தொடரில் சம்பியனாக மாறியிருந்தது. அதோடு தற்போது கிரிக்கெட் பயிற்றுவிப்பில் சிறந்து விளங்கும் திலின கண்டம்பி T10 லீக் தொடரில் ஆடும் பங்களா டைகர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜப்னா கிங்ஸ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் மாறியுள்ள மரியோ வில்லவராயன் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டில் 12 வருடகாலம் வீரராக விளையாடியிருப்பதோடு, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடும் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் பயிற்றுவிப்புக் குழாத்திலும் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். இதோடு மரியோ வில்லவராயன் இலங்கையின் A கிரிக்கெட் அணி, இலங்கை அபிவிருத்திக் கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்காகவும் பயிற்றுவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், ஜப்னா கிங்ஸ் அணிக்கு துடுப்பாட்டப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜெஹான் முபாரக் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். கிரிக்கெட் விளையாட்டில் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் பயிற்றுவிப்பு பணிகளை தொடர்ந்து வருகின்ற ஜெஹான் முபாரக் தற்போது கொழும்பு ரோயல் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவருகின்றார்.
>> மஹேலவிற்கு முரளிதரன் எழுதிய மடல்
அதேநேரம், ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல்பந்துப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான சசித் பத்திரன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் விமுக்தி தேசப்பிரிய ஜப்னா கிங்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக கடமையாற்றவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர சஞ்சீவ கமகே (Physiotherapist), GT. நிரோஷன் (Computer Analyst), லக்ஷ்மன் குணசேகர (Masseur) போன்றவர்களும் ஜப்னா கிங்ஸ் அணியின் முகாமைத்துவத்திற்குள் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<