LPL வீரர்கள் ஏலம் தொடர்பில் விமர்சனம் செய்துள்ள மஹேல ஜயவர்தன

328

இரண்டாவது பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் சில முன்னணி வீரர்கள் எந்த அணிகளாலும் கொள்வனவு செய்யப்படாமை குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்டவீரருமான மஹேல ஜயவர்தன விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றார்.

>>இரண்டாவது LPL ஏலத்தில் சிரேஷ்ட வீரர்கள் நீக்கம்; புதுமுக வீரர்கள் அறிமுகம்

LPL தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்குரிய வீரர்கள் ஏலம் நேற்று (09) இணையவழி மூலமாக (Video Conference) நடைபெற்றிருந்தது. இந்த வீரர்கள் ஏலத்தில் தொடரில் பங்கெடுக்கும் ஐந்து அணிகளின் மூலமும் பல இளம் வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்ட போதும் சிரேஷ்டவீரர்களான குசல் ஜனித் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் உள்ளடங்கலாக இளம் சுழல்பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம போன்ற வீரர்கள் எந்த அணிகளினாலும் கொள்வனவு செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்த விடயத்திற்காக நேற்று LPL வீரர்கள் ஏலம் நிறைவடைந்த பின்னர் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், இந்த வீரர்கள் ஏலத்தினை மஹேல ஜயவர்தனவும் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கின் மூலமாக விமர்சித்திருக்கின்றார்.

தனது ட்விட்டர் கணக்கில், இரண்டாவது பருவகாலத்திற்கான LPL தொடரின் வீரர்கள் ஏலம் குறித்து ஆச்சரியப்படுவதாக குறிப்பிட்டுள்ள மஹேல ஜயவர்தன, இவ்வாறான செயற்பாடு ஒன்றின் மூலம் நாட்டினது கிரிக்கெட் விளையாட்டு பின்னோக்கிச் செல்லும் எனத் தெரிவித்திருந்தார்.

அதோடு மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் சபைக்கு இந்த LPL தொடர் திறமைகளை வளர்ப்பதற்கான ஒரு தொடர் எனவும் நினைவூட்டியிருந்தார். மஹேலவின் விமர்சனத்தினை அடுத்து, LPL வீரர்கள் ஏலம் மீதான விமர்சனங்கள் இன்னும் அதிகரித்திருக்கின்றன.

விமர்சனங்கள் ஒரு பக்கமிருக்க இந்த ஆண்டுக்கான LPL தொடரில் காலி நகரத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி தவிர, ஏனைய நான்கு அணிகளும் புதிய பெயர்களுடன் (கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ளை ஜயன்ட்ஸ், கண்டி வோரியர்ஸ், ஜப்னா கிங்ஸ்) தொடரில் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<