T10 லீக் ஆடும் இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுப்பு

304
Abu Dhabi T10

முன்னர் அறிவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர், இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகும் அபுதாபி T10 லீக் தொடரில் பங்கெடுக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அபுதாபி T10 லீக் தொடரில் இலங்கையினை சேர்ந்த 09 கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுப்பர் என அறிவிக்கப்பட்ட போதும் அதில் பங்கெடுப்பதற்கான ஆட்சேபனை சான்றிதழ் (NOC) நான்கு இலங்கை வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> இரண்டாவது LPL ஏலத்தில் சிரேஷ்ட வீரர்கள் நீக்கம்; புதுமுக வீரர்கள் அறிமுகம்

இதனால் துஷ்மன்த சமீர, சாமிக்க கருணாரட்ன, மதீஷ பத்திரன மற்றும் மகீஷ் தீகஷன ஆகிய வீரர்கள் ஏற்கனவே  அறிவிக்கப்பட்டதற்கு அமைய இந்த T10 லீக் தொடரில் விளையாடமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வீரர்களில் துஷ்மன்த சமீர மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் பங்கெடுக்கும் டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகும் திரிமான்ன

இந்த நிலையில் இலங்கையின் T20 மற்றும் ஒருநாள் அணிகளின் தலைவர் தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ, மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகிய மூவரும் இலங்கையில் இருந்து T10 லீக் தொடரில் பங்கெடுக்காமல் போகின்ற வீரர்களை பிரதியீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வீரர்களில் பானுக்க ராஜபக்ஷ T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக அசத்தலாக செயற்பட்டிருந்ததோடு, அஞ்செலோ பெரேரா கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த LPL தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக மாறியிருந்தார்.

அபுதாபி T10 லீக் இந்த ஆண்டு 30 லீக் போட்டிக்கள் நடைபெறவுள்ளதோடு, லீக் போட்டிகளின் பின்னர் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி தொடக்கம் பிளே ஒப் சுற்று நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<