மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம் விதித்த ICC

ICC T20 World Cup – 2021

286

இலங்கை அணிக்கு எதிரான T20 உலகக் கிண்ண சுபர் 12 லீக் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசிமுடிக்க தவறிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் நேற்று (04) இரவு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தின் 35ஆவது லீக் போட்டியில் இலங்கை அணியிடம் 20 ஒட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியைத் தழுவியதுடன், அரையிறுதிக்கான வாய்ப்பையும் இழந்தது.

இந்த நிலையில், குறித்த போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரங்கள் எடுத்துக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 20 சதவீதத்தை அபராதமாக ICC விதித்துள்ளது.

போட்டியின் பின்னர், அலிம் தார் மற்றும் லேங்டன் ஆகிய கள நடுவர்கள் இருவரும் போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன்னிடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இதுதொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் கிரொன் பொல்லார்ட் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், வீரர்களுக்கான அபாரதம் உறுதிசெய்யப்பட்டது.

இதன்படி, வீரர்கள் மற்றும் வீரர்களுக்கான உதவியாளர்கள் தொடர்பில் ICC இன் ஒழுங்கு விதிமுறைகளின் 2.22 சரத்துக்கு அமைய, குறித்த ஓவர் ஒன்றுக்காக பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட அந்த அணியின் வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்க முடியும் என ICC அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், தாம் செய்த தவறினை மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் கிரொன் பொல்லார்ட் ஒப்புக் கொண்டதால், அது தொடர்பில் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை என ICC மேலும் தெரிவித்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<