குறித்த ஒரு T20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க முறியடித்துள்ளார்.
அபுதாபியில் நேற்று (04) இரவு நடைபெற்ற சுபர் 12 சுற்றின் தனது இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான மேற்கிந்திய தீவுகளை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று 2021 ஐசிசி T20 உலகக் கிண்ண பயணத்தை இலங்கை அணி வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டு வந்தது
மேற்கிந்திய தீவுகளை T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றிய இலங்கை
இந்தப் போட்டியில் மீண்டும் பந்துவீச்சில் மிரட்டிய வனிந்து ஹஸரங்க 4 ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் இம்முறை T20 உலகக் கிண்ணத்தின் தகுதிகாண் சுற்று உட்பட 8 போட்டிகளில் மொத்தமாக 16 விக்கெட்டுகளை கைப்பற்றி வனிந்து ஹஸரங்க முன்னிலை பெற்றார்.
அத்துடன், T20 உலகக் கிண்ண போட்டித் தொடரொன்றில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இலங்கையின் முன்னாள் வீரர் அஜந்த மெண்டிஸின் சாதனையை 9 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்து புதிய மைல்கல்லையும் ஹஸரங்க எட்டினார்.
முன்னதாக, அஜந்த மெண்டிஸ் 2012இல் இலங்கையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, குறித்த ஒரு T20 உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார்.
T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்ற வனிந்து
இந்தப் பட்டியலில் டெர்க் நென்னிஸ் 14 விக்கெட்டுக்களுடன் (2010) மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தானின் உமர் குல் 13 விக்கெட்டுக்களுடன் (2009, 2007) நான்காவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆண்களுக்கான T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள வனிந்து ஹஸரங்க, தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
T20 உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் சாதனை படைத்த முதல் இலங்கையர் மற்றும் ஆசிய நாட்டவராகவும், முதல் சுழல் பந்துவீச்சாளராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.
அதுமாத்திரமின்றி, இந்த ஆண்டில் நடைபெற்ற T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (36) வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் வனிந்து ஹஸரங்க இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதன் மூலம் T20 போட்டிளில் குறைந்த இன்னிங்ஸில் 50 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இரண்டாவது இலங்கை வீரராகவும், உலகின் 3ஆவது வீரராகவும் ஹஸரங்க இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<