இந்த ஆண்டு நடைபெறவுள்ள இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் (LPL 2021) தொடரில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக (Icon Player) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான இசுரு உதான அறிவிக்கப்பட்டுள்ளார்.
LPL தொடரின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இம்முறை LPL தொடருக்கான வீரர்கள் பதிவு கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி முதல் ஆரம்பமானதுடன், ஒக்டோபர் 7ஆம் திகதி நிறைவுக்கு வந்தது.
>> ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலம்
இதன்படி, இம்முறை LPL தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், இலங்கையின் 300 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 300 பேர் என 600 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதுஇவ்வாறிருக்க, இம்முறை LPL தொடருக்கான வீரர்கள் ஏலத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) இணையவழி ஊடாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இம்முறை வீரர்கள் ஏலம் நடைபெறுவதற்கு முன் ஒவ்வொரு அணிகளுக்கும் நான்கு உள்நாட்டு வீரர்களையும், இரண்டு வெளிநாட்டு வீரர்களை தெரிவுசெய்து கொள்ள போட்டி ஏற்பாட்டுக் குழு அனுமதி வழங்கியிருந்தது.
இதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான இசுரு உதானவை தமது அணியின் நட்சத்திர வீரராக பெயரிட்டுள்ளது.
>> ஜப்னா கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக பாப் டு பிளெசிஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக இசுரு உதான விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர்களில் ஒருவரான இசுரு உதான, கடந்த ஜுலை மாதம் இலங்கையில் நடைபெற்ற இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் T20i தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<