தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, பங்களாதேஷிற்கு எதிரான சுபர் 12 சுற்றுப் போட்டியில் வெற்றியினைப் பதிவு செய்ததனை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணி, இம்முறை T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்திருக்கின்றது.
வேகப்பந்துவீச்சாளர்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்த தென்னாபிரிக்கா
சுபர் 12 சுற்றில் இலங்கை அணி நான்கு போட்டிகளில் ஆடி பங்களாதேஷிற்கு எதிராக பதிவு செய்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகளுடன் காணப்பட்ட நிலையில், இலங்கையின் குழுவில் உள்ள பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா அணிகள் இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா தோல்வியுறும் பட்சத்தில் இலங்கை அணிக்கு அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான குறுகிய வாய்ப்பு ஒன்று காணப்பட்டிருந்தது.
இந்நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றியுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் மூன்று வெற்றிகளுடன் மொத்தமாக 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால், இலங்கை அணிக்கு சுபர் 12 சுற்றில் மேற்கிந்திய தீவுகளுடன் எஞ்சியுள்ள ஒரேயொரு போட்டியில் வெற்றி பெற்றாலும் 4 புள்ளிகளை மாத்திரமே T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் பெற முடியும்.
எனவே, தென்னாபிரிக்காவினை புள்ளிகள் அடிப்படையில் முந்த முடியாத இலங்கை அணி T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச்சுற்றுக்கு செல்கின்ற வாய்ப்பினை இழந்திருப்பதுடன், மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியினை அடுத்து இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இருந்தும் வெளியேறுகின்றது.
LPL தொடரின் வீரர்கள் வரைவுக்கான திகதி அறிவிப்பு!
அதேநேரம், சுபர் 12 சுற்றின் குழு 1 இல் இருந்து ஏற்கனவே இங்கிலாந்து அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில், குழு 1 இல் காணப்படும் ஏனைய அணிகளான அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு அரையிறுதிச்சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
தற்போது சுபர் 12 சுற்றில் 3 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியுடன் காணப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி சற்று மந்தமான Net Run Rate இணைக் கொண்டிருப்பதுடன் தமது அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்ய தாம் விளையாடும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாய வெற்றியினைப் பதிவு செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றது. அதேநேரம் அவுஸ்திரேலிய அணிக்கும் தமது எஞ்சிய போட்டிகள் இரண்டிலும் கட்டாய வெற்றி தேவைப்படுவதோடு, பங்களாதேஷ் தாம் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியினை தழுவி T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<