ஆஸி.யை வீழ்த்த சரியான தருணம் ; பயன்படுத்துமா இலங்கை?

ICC Men’s T20 World Cup 2021

428

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்றுவரும் T20 உலகக் கிண்ணத்தொடரின், சுபர் 12 சுற்றில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தங்களுடைய இரண்டாவது போட்டியில், வியாழக்கிழமை (28) டுபாயில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சுபர் 12 சுற்றில் இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில், பங்களாதேஷ் அணியை வீழ்த்தியிருந்ததுடன், அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி, இலங்கை அணியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.

<<T20i புதிய தரவரிசையில் இலங்கை மற்றும் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்>>

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I போட்டி மோதல்களில், இரண்டு அணிகளும் சம பலத்தை கொண்டுள்ளன. இரு அணிகளும் 16  போட்டிகளில் தலா 8 வெற்றிகளை பெற்றுள்ளன.

எனினும், இறுதியாக நடைபெற்ற 5 T20I போட்டிகளில், அவுஸ்திரேலிய அணி அதிகமான ஆதிக்கத்தை செலுத்திவருகின்றது. இறுதியாக நடைபெற்ற 5 போட்டிகளில், 4 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று ஆதிக்கத்தை காட்டி வருகின்றது.

அதேநேரம், இவ்விரு அணிகளும் மொத்தமாக 3 T20 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 2 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியும், ஒரு போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. எனினும், இவ்விரு அணிகளும் இறுதியாக 2010ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தின் போதே நேரடியாக மோதியுள்ளன. அதன் பின்னர், எந்த T20 உலகக் கிண்ணங்களிலும் மோதவில்லை. எனவே, 2010ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இந்தப் போட்டியின்மூலம் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கை அணி

T20 உலகக் கிண்ணத்துக்கு பாரிய எதிர்பார்ப்புகளின்றி இலங்கை அணி சென்றிருந்தாலும், தற்போது விளையாடிவரும் விதம் அணிக்கு உறுதியான மனநிலையை உருவாக்கியுள்ளது.

ஓமான் அணிக்கு எதிரான தொடர் முதல் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவரும், இலங்கை அணி இறுதியாக சுபர் 12 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியை மிகச்சிறந்த முறையில் வெற்றிக்கொண்டிருந்தது.

குறிப்பாக, முதல் சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சிப்போட்டிகளில் அணிக்கு பந்துவீச்சாளர்கள் மாத்திரமே வெற்றிக்கு அதிகமான காரணமாக இருந்தனர். எனினும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில், நீண்டகால கேள்வியாக இருந்த இலங்கை அணியின் மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரருக்கான குறை நிவர்த்திசெய்யப்பட்டுள்ளது.

சரித் அசலங்க மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கியது மாத்திரமின்றி, பங்களாதேஷ் அணி நிர்ணயித்திருந்த 172 என்ற வெற்றியிலக்கை, தன்னுடைய பங்காக 80 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதேநேரம், பானுக ராஜபக்ஷவும் அரைச்சதம் கடந்து பிரகாசித்திருந்தார்.

எனவே, துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா சற்று தடுமாறிவந்தாலும், அவர் அடுத்த போட்டிகளில் பிரகாசிக்க தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமாத்திரமின்றி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் சில தவறுகள் விடப்பட்டிருந்ததுடன் பினுர பெர்னாண்டோவின் இணைப்பு அதிகமான கேள்விகளை எழுப்பியிருந்தன.

எவ்வாறாயினும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் உபாதைக்குள்ளாகிய மஹீஷ் தீக்ஷன மீண்டும் நாளைய தினம் விளையாடுவார் என்ற உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, குறித்த மாற்றம் இலங்கை அணியில் மேற்கொள்ளப்படும் என்பதுடன், துடுப்பாட்டத்தில் சற்று தடுமாறிவரும் அவுஸ்திரேலிய அணிக்கு சரியான போட்டியை இலங்கை அணி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு வீரர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக மஹீஷ் தீக்ஷன உள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடவிட்டாலும்,  துடுப்பாட்டத்தில் தடுமாறிவரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சிறந்த ஒரு தெரிவாக மஹீஷ் தீக்ஷன இருப்பார்.

வனிந்து ஹஸரங்க இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக இருக்கும் போதும், மஹீஷ் தீக்ஷன இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகின்றார். இவர், மூன்று போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் மஹீஷ் தீக்ஷனவை இதற்கு முதல் எதிர்கொண்டதில்லை. எனவே, இந்தப் போட்டியில், இலங்கை அணியின் துறுப்புசீட்டாக மஹீஷ் தீக்ஷன இருப்பார் என்பதில் எவ்வித கேள்விகளும் இல்லை.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார

அவுஸ்திரேலிய அணி

அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை, தொடர்ச்சியாக விளையாடிய T20I தொடர்கள் சாதகத்தன்மையை கொடுக்கவில்லை. கடந்தகாலங்களில் விளையாடிய T20I தொடர்களில் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக டேவிட் வோர்னர், மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச் மற்றும் கிளேன் மெக்ஸ்வேல் என அனைத்து முன்னணி வீரர்களடங்கிய குழாமாக உலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தது.

இதற்கு முதல் நடைபெற்ற தொடர்களில் முன்னணி வீரர்களின்றி களமிறங்கியதுடன், தொடர் தோல்விகளை தழுவியிருந்தது. இறுதியாக இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களை இழந்த நிலையிலேயே அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்துக்கு களமிறங்கியது.

T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் பயிற்சிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்திருந்த அவுஸ்திரேலிய அணி இரண்டாவது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது. குறித்த வெற்றியின் பின்னர், நேரடியாக சுபர் 12 சுற்றின் முதல் போட்டியில் விளையாடிய ஆஸி. அணி, தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்திருந்தது.

அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை எடம் ஷாம்பா, பெட் கம்மின்ஸ், ஜோஸ் ஹெஷல்வூட் மற்றும் மிச்சல் ஸ்டார்க்  என முன்னணி பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனினும், துடுப்பாட்டத்தில் டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆரோன் பின்ச் போன்ற முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி வருகின்றனர். எனவே, தங்களுடைய துடுப்பாட்டத்தை மெழுகேற்றிக்கொண்டு, இலங்கை அணியை எதிர்கொள்ள அவுஸ்திரேலியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு வீரர்

அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை, துடுப்பாட்டம் மற்றும் பகுதிநேர சுழல் பந்துவீச்சு என அனைத்திலும் பிரகாசித்து வருபவர் கிளேன் மெக்ஸ்வேல். அவுஸ்திரேலிய அணிக்காக தொடர்ச்சியாக ஓட்டங்களை குவித்து வருகின்றார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த போதும், ஐ.பி.எல். தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேநேரம், பயிற்சிப்போட்டியில், இந்திய அணிக்கு எதிராக ஓட்டங்களை குவித்திருந்த இவர், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 18 ஓட்டங்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தார். இந்த பிரகாசிப்பு போதுமானதாக இல்லாத போதும், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா குழாம்

ஆரோன் பின்ச் (தலைவர்), பெட் கம்மின்ஸ் (உப தலைவர்), அஸ்டன் ஆகர், ஜோஸ் ஹெஷல்வூட், ஜோஸ் இங்க்லிஸ், மிச்சல் மார்ஸ், கிளேன் மெக்ஸ்வேல், கேன் ரிச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டெயானிஸ், மிச்சல் ஸ்வெப்ஸன், மெதிவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷாம்பா

இறுதியாக…

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் 2010ம் ஆண்டுக்கு பின்னர், முதன்முறையாக T20 உலகக் கிண்ணத்தில் நேரடியாக மோதுகின்றன. 2010ம் ஆண்டுக்கு பின்னர், அணிகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், இறுதியாக விளையாடிய இருதரப்பு மோதல்களில், அவுஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கின்றது.

ஆனால், துணைக்கண்டங்களில் அவுஸ்திரேலிய அணியின் பிரகாசிப்பு கூறும் அளவிற்கு இல்லை. அதுமாத்திரமின்றி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியை வெற்றிக்கொண்டிருந்தாலும் குறித்த வெற்றி பலமானதாக இல்லை.

எனவே, சுழல் பந்துவீச்சாளர்களை பலமாக கொண்டுள்ள இலங்கை அணிக்கு, அவுஸ்திரேலிய அணியை  வீழ்த்துவதற்கான சரியான தருணமாக இந்த போட்டி அமைந்துள்ளது. எனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>