மூன்று கண்காட்சிப் போட்டிகள் கொண்ட 2021ஆம் ஆண்டுக்கான ரெட் புல் பல்கலைக்கழக பெண்கள் கிரிக்கெட் சம்பியன்ஷிப் (Red Bull Campus Cricket Women’s Championship 2021) தொடரின் முதல் போட்டியில், Wadduwa Central அணிக்கு எதிராக ESoft Metro Campus அணி வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ESoft அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை Wadduwa Central அணிக்கு வழங்கியது. இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய Wadduwa Central அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 58 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பில் எந்த வீராங்கனையும் இரு இலக்க ஓட்டங்களைப் பெற்றிருக்காத நிலையில், உதிரிகள் மூலமாக Wadduwa Central அணி 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
மறுமுனையில் ESoft அணிக்காக ஜனதி அனாலி தன்னுடைய 4 ஓவர்களில் வெறும் 11 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 59 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ESoft அணிக்கு சற்று சவால்கள் காணப்பட்ட போதும் அவ்வணி போட்டியின் வெற்றி இலக்கினை 16.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 61 ஓட்டங்களுடன் அடைந்தது.
<<T20i புதிய தரவரிசையில் இலங்கை மற்றும் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்>>
போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கான பயணத்தில் ESoft அணி ஒரு கட்டத்தில் 19 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய போதும், அவ்வணியின் வெற்றியானது ரஷ்மி நெத்ரான்ஜலி (5) மற்றும் விஹாரி செவ்வந்தி (14) ஆகியோரின் இணைப்பாட்டத்தோடு (18) உறுதி செய்யப்பட்டது.
ESoft அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த ஏனைய வீராங்கனையான மல்ஷா மதுஷானி விரைவான முறையில் 14 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தார்.
போட்டியின் சுருக்கம்
Wadduwa Central அணி – 58 (17.5) சவிந்தி நிமால்ஷா 9(8), ஜனதி அனாலி 3/11, நிமாஷ மதுஷானி 2/18
ESoft Metro Campus அணி – 61/8 (16.3) விஹாரி செவ்வன்தி 14(43), மல்ஷா மதுசானி 14(13), நெத்மி பூர்னா 3/10
முடிவு – ESoft Metro Campus அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி
<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>