ICC இன் ஏழாவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சுபர் 12 சுற்றுப் போட்டிகள் சனிக்கிழமை (23) முதல் ஆரம்பமாகியது.
இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றின் குழு- 1இல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய அணிகளும், குழு 2இல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன்படி, சுபர் 12 சுற்றில் 30 போட்டிகள் நிறைவடைந்ததும் 2 குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நவம்பர் 10, 11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இரண்டு அரை இறுதிகளில் விளையாடும்.
<<சுபர் 12 சுற்று குழு 1 அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?>>
அவற்றில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் டுபாயில் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள T20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டியில் மோதும்.
இந்த நிலையில், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றில் குழு 2இல் இடம்பெற்றுள்ள ஆறு அணிகள், அதன் பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை இந்த சிறப்புக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியா
கடந்த 2007ஆம் ஆண்டு டோனி தலைமையில் T20 உலகக் கிண்ணத்துக்கு முத்தமிட்ட இந்திய அணி இந்த முறை விராட் கோஹ்லி தலைமையில் களமிறங்கவுள்ளது. டோனி ஓய்வு பெற்று விட்டாலும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோஹ்லி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், யாதவ், இஷான் கிஷன் என்று துடுப்பாட்ட வரிசையில் அதிரடிக்கு பஞ்சமில்லாத வீரர்கள் இந்திய குழாத்தில் உள்ளனர்.
அதேபோல பும்ரா, மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று தரமான பந்துவீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.
ஹர்திக் பாண்டியா இதுவரை பந்துவீசவில்லை. இதனால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகம் தான். இது இந்திய அணிக்கு பின்னடைவைக் கொடுத்தாலும், அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பிடிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
<<இரண்டாவது முறை T20 உலகக் கிண்ண சம்பியனாகுமா இந்தியா?>>
மேலும், இந்தியாவுக்கு, ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து, நியூசிலாந்து, நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இந்த சுற்றில் குழு 2இல் பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மாத்திரமே இந்தியாவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
T20 உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மேற்கூறிய அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுக்கொடுத்து போர்மில் உள்ளார்கள்.
எனவே, ஓர் அணியாக ஒன்றிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2ஆவது முறையாக T20 உலகக் கிண்ணத்தை இந்தியாவால் வெல்ல முடியும்.
அதுமாத்திரமின்றி, தனது தலைமைத்துவத்தில் ஐசிசி இன் சம்பியன் பட்டமொன்றை வெல்ல முடியாமல் தவிக்கும் விராட் கோஹ்லிக்கு அந்த ஏக்கத்தை தணிக்க இது அருமையான சந்தர்ப்பமாகும். இந்த உலகக் கிண்ணத்துடன் அவர் T20 போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவது நினைவு கூரத்தக்கது.
பாகிஸ்தான்
இம்முறை T20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுகின்ற அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற பாகிஸ்தான் அணியை நட்சத்திர வீரர் பாபர் அசாம் வழிநடத்துவதுடன் அந்த அணியிலும் திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
பாபர் அசாம், பக்கர் ஜமான், மொஹமட் ரிஸ்வான், ஆசிப் அலி ஆகியோர் துடுப்பாட்டத்தில் முக்கிய வீரர்களாக இருக்க, மத்திய வரிசையில் அனுபவம் வாய்ந்த சொஹைப் மலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் பந்துவீச்சிலும் பங்காற்றி சகலதுறை வீரர்களாக அணிக்கு வலுச்சேர்க்கிறார்கள்.
வேகப் பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்கள்.
<<மீண்டும் T20 King ஆகும் கனவுடன் உள்ள பாகிஸ்தான்>>
இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு வலுவானதாக இல்லை என்றே கூறலாம்.
இதில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஆடுகளங்களில் சுழல்பந்துவீச்சு அதிகமான தாக்கத்தைக் கொடுக்கும். ஆனால் பாகிஸ்தான் அணியில் இருக்கும் இமாத் வசிம், சதாப் கான் போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களது பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்களை ரத்து செய்ததால் சமீபத்தில் பாகிஸ்தான் அணி எந்தவொரு சர்வதேச கிரிக்கெட்டிலும் பங்கேற்க முடியாமல் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ளது.
எனவே, கிரிக்கெட் உலகில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள பாபர் அசாம் முதல் முறையாக T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தவுள்ளார்.
அவரது தலைமையில் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் வெற்றி பெறுவது மாத்திரமல்லாது, உலகக் கிண்ண வரலாற்றில் இந்தியாவிடம் தொடர்ந்து தோற்று வரும் சோகத்துக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் ஆட தயாராக உள்ளது.
நியூசிலாந்து அணி
இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி உலக அளவில் மிகச்சிறந்த அணியாக உள்ளது. இறுதியாக கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஐசிசி இன் அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை அந்த அணி கைப்பற்றியிருந்தது.
எனினும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணி மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. எனினும், இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவரில் சம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த நிலையில், தற்போது முதல் முறையாக T20 உலக் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. எந்தவித கடினமான தருணத்திலும் நிதானத்துடன் செயல்பட்டு வெற்றியை பெற்றுத் தரக்கூடிய கேன் வில்லியம்சன் தலைமையில் டெவோன் கொன்வே, மார்ட்டின் கப்டில் என அந்த அணிக்கு ஆரம்ப வரிசை வலுவாக காணப்படுகிறது.
<<சவால்களுடன் T20 உலகக் கிண்ணத்தை இலக்கு வைக்கும் நியூசிலாந்து>>
அதேபோல, ஜிம்மி நீஷம், கெயில் ஜெமிஸன், டார்லி மிச்சல், மிச்சல் சென்ட்னர் போன்ற பந்துவீச்சு சகலதுறை வீரர்களால் அந்த அணியின் மத்திய வரிசை ஓரளவு சிறப்பாக உள்ளது.
பந்துவீச்சில் லொக்கி பேர்கஸன், ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி என அதிரடி வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
பாகிஸ்தான் போலவே நியூசிலாந்து அணியிலும் மிச்சல் சென்ட்னர், இஸ் சோதி, போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை. அதேபோல் அந்த அணியின் மத்திய வரிசையும் சற்று வலுவற்று காணப்படுகிறது.
குறிப்பாக, உலகக் கிண்ணம் போன்ற முக்கிய போட்டிகளில் ஆரம்பத்தில் ஆரம்ப வரிசை சொதப்பினால் கேன் வில்லியம்சன் தவிர இதர துடுப்பாட்ட வீரர்கள் சவாலை சந்தித்து ஓட்டங்களைக் குவிக்கும் அளவுக்கு இல்லை.
ஆப்கானிஸ்தான்
ஐசிசி T20 தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது. அதேபோல, ஆப்கானிஸ்தான் அணி இதுவரையில் T20 உலகக் கிண்ணத்தை வெற்றிபெறவில்லை. இதுவரையில் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறவில்லை.
எனினும், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் மொஹமட் நபி தலைமையில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய துரும்புச்சீட்டாக சுழல்பந்துவீச்சு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, அந்த அணியின் முக்கிய வீரர்களாக ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், மொஹமட் நபி ஆகியோர் உள்ளனர். ரஷித் கானின் சுழல்பந்தை எதிர்கொள்ள வீரர்கள் திணறுகின்றனர்.
குறிப்பாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஆடுகளங்களில் இந்த வீரர்கள் நிச்சயம் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
T20 உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் கூட பலம் வாய்ந்த நடப்புச் சம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை இலகுவாக ஆப்கானிஸ்தான் அணி தோற்கடித்தது.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை துடுப்பாட்ட வரிசை வலுவானதாக இல்லை என்றே கூறலாம். ரஹமதுல்லா குர்பாஸ் போன்ற ஒருசில வீரர்களைத் தவிர அந்த அணியின் துடுப்பாட்டடம் பலவீனமாகவே உள்ளது. வேகப்பந்துவீச்சில் நவீன் உல் ஹக் மாத்திரம் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், T20 உலகக் கிண்ணத்துக்கு முன்பாக ரஷித் கான் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையில் நிலவும் குழப்பங்கள் போன்ற விடயங்கள் அந்த அணி வீரர்களிடையே மனதளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே கூறலாம்.
நமீபியா
இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாகக் களமிறங்கிய நமீபியா அணி, தகுதிகாண் சுற்றில் A குழுவில் இடம்பிடித்தது. தனது ஆரம்பப் போட்டியில் இலங்கையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த நமீபியா அணி, இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி சுபர் 12 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.
இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற தீர்மானமிக்க 3ஆவது போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய நமீபியா அணி T20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்று வரலாறு படைத்தது.
சுபர் 12 சுற்றுக்கு நமீபியா அணி தகுதி பெற்றது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கும் நேரடியாக தகுதிபெற்றுள்ளது.
எனவே, T20 உலகக் கிண்ணத் தொடரில் முன்னணி அணிகள் பங்குபற்றுகின்ற சுபர் 12 சுற்றுக்கு நமீபியா போன்ற சிறிய நாடொன்று தகுதி பெறுவது அவர்களுக்கு மிகப்பெரிய சாதனையாகும்.
<<T20 உலகக் கிண்ணம்; தகுதி சுற்றில் இலங்கைக்கு எதிரான சவால்கள்>>
நமீபியாவின் முக்கிய துரும்புச்சீட்டாக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டேவிட் வீஸி உள்ளார். உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஒரு அரைச் சதத்ததையும், 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார்.
மறுபுறத்தில் அந்த அணியின் தலைவர் கெர்ஹார்ட் எராஸ்மஸ் மற்றும் சகலதுறை வீரர் க்ரெய்க் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் வலுச்சேர்க்கவுள்ளனர்.
நமீபியா அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என்பன குறிப்பிடும்படி இல்லை. இதில் நமீபியா அணியின் பந்துவீச்சு பொறுத்தவரை வேகப் பந்துவீச்சாளர் ஜான் ப்ரைலின்கின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மற்ற பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்தளவு நெருக்கடியைக் கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.
எனவே, கத்துக்குட்டி அணியாக உலகின் முன்னணி நாடுகளுடன் சுபர்-12 சுற்றில் விளையாடவுள்ள நமீபியா அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்விகள் காத்திருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. ஒவ்வொரு போட்டியும் மிகக் கடினமான சவால் நிறைந்ததாக இருக்கும் என்றாலும், சுபர்-12 சுற்றுவரை நமிபியா முன்னேறியது பாராட்டுக்குரியது.
ஸ்கொட்லாந்து
இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றில் B குழுவில் இடம்பிடித்து விளையாடிய ஸ்கொட்லாந்து அணி, முதல் போட்டியிலேயே வலுவான பங்களாதேஷ் அணியை ஆட்டம்காண வைத்தது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் நெதர்லாந்தையும், மூன்றாவது போட்டியில் ஓமானையும் வீழ்த்தி ஹெட்ரிக் வெற்றியோடு, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றுக்கு முன்னேறியது.
அணித்தலைவர் கைல் கொட்ஸர், ஆரம்ப வீரர் ஜோர்ஜ் முன்சி, கொட்ஸர் ரிச்சி பெர்ரிங்டன், மெதிவ் க்ரொஸ், ஆகியோர் துடுப்பாட்டத்தில் முக்கிய வீரர்களாக இருக்க, கிறிஸ் க்ரேவ்ஸ், மார்க் வாட் ஆகியோர் பந்துவீச்சு சகலதுறை வீரர்களாக அணிக்கு வலுசேர்க்கிறார்கள்.
அத்துடன், வேகப் பந்துவீச்சில் ஜோஸ் டேவி அந்த அணியின் முக்கிய துரும்புச்சீட்டாக விளங்குகிறார். முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் அவர் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
<<T20 உலகக் கிண்ண குழு B இல் முன்னேற்றம் காட்டுமா பங்களாதேஷ் அணி?>>
சுபர் 12 சுற்றின் குழு 2இல் உள்ள இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற பிரபல அணிகள் ஸ்கொட்லாந்துக்கு சவாலாக இருக்கவுள்ளது. அனுபவமில்லாத துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு அந்த அணிக்கு பின்னடைவைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தகுதிகாண் போட்டியைப் போல சுபர் 12 சுற்றிலும் முன்னணி அணிகளுக்கு ஸ்கொட்லாந்து அணி சவால் கொடுக்கலாம் என்பதையும் மறந்துவிட முடியாது.
குழு 2 போட்டி அட்டவணை
இந்தியா எதிர் பாகிஸ்தான் – ஒக்டோபர் 24 – டுபாய்
ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து – ஒக்டோபர் 25 – சார்ஜா
பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து – ஒக்டோபர் 26 – சார்ஜா
ஸ்கொட்லாந்து எதிர் நமீபியா – ஒக்டோபர் 27 – அபுதாபி
ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் – ஒக்டோபர் 29 – டுபாய்
ஆப்கானிஸ்தான் எதிர் நமீபியா – ஒக்டோபர் 31 – அபுதாபி
இந்தியா எதிர் நியூசிலாந்து – ஒக்டோபர் 31 – டுபாய்
பாகிஸ்தான் எதிர் நமீபியா – நவம்பர் 02 – அபுதாபி
நியூசிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து – நவம்பர் 03 – டுபாய்
இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் – நவம்பர் 03 – அபுதாபி
நியூசிலாந்து எதிர் நமீபியா – நவம்பர் 05 – சார்ஜா
இந்தியா எதிர் ஸ்கொட்லாந்து – நவம்பர் 05 – டுபாய்
நியூசிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் – நவம்பர் 07 – அபுதாபி
பாகிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து – நவம்பர் 07 – சார்ஜா
இந்தியா எதிர் நமீபியா – நவம்பர் 08 – டுபாய்
<<மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>