ஷெவோன், வனுஜவின் அபார துடுப்பாட்டத்துடன் தொடரை வென்றது இலங்கை U19

Sri Lanka U19 vs Bangladesh U19 2021

308
Shevon Daniel-(R)

பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணிக்கு எதிராக தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது இளையோர் ஒருநாள் போட்டியில், இலங்கை 19 வயதின்கீழ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகித்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இந்த போட்டி அமைந்திருந்தது. இதில், ஷெவோன் டேனியல் மற்றும் வனுஜ சஹான் ஆகியோரின் மிகச்சிறந்த இணைப்பாட்டத்துடன் வெற்றியை பதிவுசெய்த இலங்கை அணி, தொடரையும் 3-0 என கைப்பற்றியது.

>> இலங்கை அணியை நேரடியாக பாதிக்கும் ICCயின் புதிய அறிவிப்பு

அந்தவகையில், இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய அவ்வணி தடுமாற்றத்துடனான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

ஒரு கட்டத்தில் 71 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் மிகச்சிறந்த பிரகாசிப்புடன், 49.3 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணிசார்பாக அதிகபட்சமாக, அசிகூர் ஷமான் இறுதிவரை துடுப்பெடுத்தாடி 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இவருக்கு உதவியாக அஹோஷன் ஹபிப் 33 ஓட்டங்களையும், நய்மூர் ரஹ்மான் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, இன்றைய போட்டியில் இளையோர் அணிக்காக அறிமுகமாகியிருந்த வினுஜ ரன்போல் மற்றும் ரவீன் டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும்,  மற்றுமொரு அறிமுக வீரரான வனுஜ சஹான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி, முதல் இரண்டு விக்கெட்டுகளையும் விரைவாக இழந்த போதும், ஷெவோன் டேனியல் மற்றும் பவன் பதிராஜ ஆகியோரின் இணைப்பாட்டத்துடன் வெற்றியிலக்கை நோக்கி முன்னேறியது. பவன் பதிராஜவின் ஆட்டமிழப்பின் பின்னர் இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது.

எனினும், இறுதியாக ஷெவோன் டேனியல் மற்றும் வனுஜ சஹான் ஆகியோரின் மிகச்சிறந்த இணைப்பாட்டத்துடன், இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஒரு கட்டத்தில், இலங்கை அணி 122 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், ஷெவோன் மற்றும் வனுஜ ஆகியோர் 66 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

ஷெவோன் டேனியல் அதிகபட்சமாக 85 ஓட்டங்களையும், வனுஜ சஹான் 38 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக, பவன் பதிராஜன 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், முஷ்பிக் ஹஸன் 3 விக்கெட்டுகளையும் அஹோஷன் ஹபிப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, 5 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரை இலங்கை 19 வயதின்கீழ் அணி 3-0 என கைப்பற்றியுள்ளதுடன், அடுத்த போட்டி எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

பங்களாதேஷ் U19 – 184/10 (49.3), அசிகூர் ஷமான் 54, அஹோஷன் ஹபிப் 33, நய்மூர் ரஹ்மான் 27, வினுஜ ரன்போல் 32/3, மற்றும் ரவீன் டி சில்வா 32/3, வனுஜ சஹான் 26/2

இலங்கை U19 – 188/7 (46.4), ஷெவோன் டெனியல் 85*, வனுஜ சஹான் 38*, பவன் பதிராஜ 31, முஷ்பிக் ஹஸன் 46/3, அஹோஷன் ஹபிப் 24/2

முடிவு – இலங்கை U19 அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<

>> Click here to view Full Scorecard