ஓமானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்த பங்களாதேஷ்

ICC Men’s T20 World Cup 2021

248
Bangladesh vs Oman
@ICC

ஐசிசி T20 உலகக் கிண்ணத்தின் இன்றைய போட்டியில், ஓமான் அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரிலிருந்து தங்களுடைய வெளியேற்றத்தை தடுத்துக்கொண்டது.

முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வியடைந்த பங்களாதேஷ் அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் விளையாடியது.

>> பப்புவா நியூ கினியாவை வீழ்த்திய ஸ்கொட்லாந்துக்கு 2ஆவது வெற்றி

அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிடன் டாஸ் மற்றும் மெஹிதி ஹாஸன் ஆகியோர் விரைவாக ஆட்டமிழக்க, 21 ஓட்டங்களுக்கு பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அனுபவ வீரர் ஷகிப் அல் ஹஸனுடன், இளம் வீரரான மொஹமட் நயீம் இணைந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதில், மொஹமட் நயீம் அரைச்சதம் கடந்து 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஷகிப் அல் ஹஸன் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களின் இணைப்பாட்டத்துடன், பங்களாதேஷ் அணி முன்னேறிய போதும், இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில், மொஹமதுல்லாஹ் மாத்திரம் 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்தனர்.

எனவே, பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஓமான் அணியின் பந்துவீச்சை பெருத்தவரை, பயாஸ் பட் மற்றும் பிலால் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, கலீமுல்லாஹ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஜெட்டிந்தர் சிங்கின் வேகமான ஓட்டக்குவிப்புடன் ஓமான் அணி துடுப்பாட்டத்தை நகர்த்தியிருந்த போதும், மத்தியவரிசையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த ஓமான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து  127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

ஓமான் அணி சார்பாக ஜெட்டிந்தர் சிங் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, இவருக்கு அடுத்தப்படியாக கஷ்யப் பிரஜாபத்தி 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் முஷ்தபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஹஸன் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதேவேளை, மிகச்சிறந்த பிரகாசிப்புடன் வெற்றியை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி,  B குழுவின் புள்ளிப்பட்டியலில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சுருக்கம்

பங்களாதேஷ் – 153/10 (20), மொஹமட் நயீம் 64 (50), ஷகிப் அல் ஹஸன் 42 (29), பிலால் கான் 18/3, பயாஸ் பட் 30/3, கலீமுல்லாஹ் 30/2

ஓமான் – 140/9 (20), ஜெட்டிந்தர் சிங் 40 (33), கஷ்யப் பிரஜாபத்தி 21 (18), முஷ்தபிசூர் ரஹ்மான் 36/4, சகிப் அல் ஹஸன் 28/3

முடிவு – பங்களாதேஷ் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<

>> Click here to view full scorecard