மஹேலவால் T20 ஹீரோவான அகில

ICC T20 World Cup – 2021

1529
Getty Image

கிரிக்கெட் உலகிற்கு பல நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்களை ஈன்று கொடுத்த அணிகளில் இலங்கைக்கு முக்கிய இடம் உண்டு. இதில் இலங்கைக்கு உலகளாவிய ரீதியில் பெருமையைப் பெற்றுக்கொடுத்த முதன்மையான வீரர் தான் முத்தையா முரளிதரன்.

முரளிதரனின் காலம் இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலமாக அமைந்தது. உலகின் முன்னணி நாடுகளுக்கு தண்ணி காட்டிய முரளிதரன், கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை முறியடித்தார். இன்றும் அவரது சாதனைகள் யாராலும் தகர்க்கப்படாமல் இருக்கின்றன.

எவ்வாறாயினும், 2011இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்துடன் முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்த பிறகு இலங்கை அணியில் அவரது இடத்தை நிரப்புவதற்கு பலத்த போட்டி ஏற்பட்டது.

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் 4 மாற்றங்கள்!

இதில் ரங்கன ஹேரத், அஜந்த மெண்டிஸ், சுராஜ் ரன்தீவ், சச்சித்ர சேனநாயக்க உள்ளிட்ட வீரர்கள் முதன்மையானவர்கள். எனினும், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ண இலங்கை அணியில் 18 வயது இளம் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜயவின் அறிமுகம் முழு உலகின் கவனத்தையும் பெற்றுக்கொண்டது.

இலங்கையின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலோ, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேசப் போட்டிகளிலோ பங்கேற்று அனுபவம் பெறாத ஒரு வீரராக, அகில தனன்ஜய எவ்வாறு இலங்கை அணியில் இடம்பிடித்தார்? அவருக்கு யார் அணியில் வாய்ப்பு கொடுத்தது? அவரிடம் இருந்த சிறப்பம்சம் என்ன? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ஐசிசி இன் நான்காவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற்றது.

ஆசிய நாடொன்றில் நடைபெற்ற முதலாவது T20 உலகக் கிண்ணம் இதுவாகும். ஏனைய மூன்று போட்டிகளும் முறையே தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெற்றன.

இதில் இலங்கை, இந்திய உள்ளிட்ட 12 நாடுகள் பங்குகொண்டதுடன், இலங்கை அணியின் தலைராக மஹேல ஜயவர்தன செயல்பட்டார்.

2009 T20 உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி, 2010 உலகக் கிண்ணத்தில் அரையிறுதிப் போட்டி என அடுத்தடுத்து T20 உலகக் கிண்ணத்தில் முன்னிலை அணியாக வலம்வந்த இலங்கை அணி, சொந்த மண்ணில் 2012இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்திலும் இறுதிப் போட்டிவரை வந்து மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

எவ்வாறாயினும், 2012 T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் புதுமுக சுழல்பந்துவீச்சாளராக அகில தனன்ஜய என்ற 18 வயது இளம் வீரர் அறிமுகமாகி விளையாடினார்.

T20 உலகக் கிண்ணம் 2010 இன் ‘Run Machine’ மஹேல ஜயவர்தன

அதில் குறிப்பாக நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அனைவரது பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.

அகில தனன்ஜய பாணந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பாணந்துறை மஹாநாம வித்தியாலயத்தில் கல்வி கற்ற அவர், பாடசாலைக் காலத்தில் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரராக வலம்வந்தார். அப்போது 3ஆவது பிரிவின் கீழ் கிரிக்கெட் விளையாடும் பாடாசாலையாகத் தான் அகிலவின் பாடசாலை விளங்கியது.

அகில தனன்ஜய அடிப்படையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினைப் போல, ‘Off Break’ பந்துவீச்சாளர்தான். ஆனால், அஷ்வினைப் போலவே பந்துவீச்சில் வித்தியாசங்களை கையாளுவதுதான் இவரின் சிறப்பம்சமாகும்.

அதாவது, ஓப் பிரேக் தவிர, லெக் பிரேக், கூக்ளி, தூஸ்ரா, கேரம் உட்பட தனது பந்துவீச்சில் மொத்தம் 5 வகையான பந்துவீச்சு நுணுக்கங்களை வெளிப்படுத்துபவராக அகில தனன்ஜய விளங்கினார்.

இவரது திறமையை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வந்தவர் தான் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன.

உலக கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் முதன்மையான வீரர்களில் ஒருவராக திகழ்ந்த மஹேல ஜயவர்தன, இலங்கை அணியின் வலைப் பயிற்சியின்போது அகில தனன்ஜயவை அதிகம் பயன்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, 2011 சார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அப்போதைய உலகின் நம்பர் வன் டெஸ்ட் பந்துவீச்சாளரான சஹீட் அஜ்மாலின் பந்துக்கு முகங்கொடுப்பதை இலகுவாக்க, அகில தனன்ஜயவின் பந்துவீச்சின் மூலம் தான் இலங்கை அணி வீரர்கள் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அகிலவின் பந்தவீச்சு திறமையைப் பார்த்து மஹேலவும், இலங்கை அணியின் அப்போதைய பயிற்சியாளருமான கிரஹெம் போர்ட்டும் பிரம்மிப்புக்குள்ளானார்கள்.

இதன்காரணமாக 2012 T20 உலகக் கிண்ணத்துக்கு முன் நடைபெற்ற அங்குரார்ப்பண ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் (SLPL) T20 தொடரில் மஹேல ஜயவர்தன தலைமையிலான வயம்ப யுனைடெட் அணியில் அகில தனன்ஜயவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்தத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அவர், 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இதில் நெகனஹிர நாகாஸ் அணிக்கெதிரான போட்டியில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை எடுத்து அசத்தியிருந்தார்.

எனவே, SLPL தொடரில் அகில தனன்ஜய வெளிப்படுத்திய திறமையின் காரணமாக மஹேல ஜயவர்தனவின் பரிந்துரையின் படி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இறுதி 15 பேர் கொண்ட இலங்கை அணியில் அவர் பெயரிடப்பட்டார்.

குறிப்பாக, இலங்கையின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலோ, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேசப் போட்டிகளிலோ பங்கேற்று விளையாடாத அகிலவுக்கு நேரடியாக இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு கொடுத்ததை பலரும் சர்ச்சை ஆக்கினார்கள். குறிப்பாக, 18 வயதில் அவர் இலங்கை அணிக்காக விளையாடியது அரசியல் தலையீடு என்றும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தன்மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை காதில் கொள்ளாமல் தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர் சரியான முறையில் பயன்படுத்தினார். இதற்கு மஹேல ஜயவர்தன பக்கபலமாக இருந்ததையும் இங்கு கட்டாயம் சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே, T20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக வெற்றியீட்டிய இலங்கை அணி, தென்னாபிரிக்கா அணியுடனான 2ஆவது போட்டியில் தோல்வியைத் தழுவியது.

எனினும், குறித்த இரண்டு போட்டிகளிலும் அகில தனன்ஜயவுக்கு மஹேல வாய்ப்பு கொடுக்கவில்லை.

மறுபுறத்தில், 4 புள்ளிகளை எடுத்து C பிரிவில் 2ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகியது.

இதன்படி, சுப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை இலங்கை எதிர்கொண்டதுடன், இந்தப் போட்டியில் அகில தனன்ஜய அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியில் தனது முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணியின் ஆரம்ப வீரர் மார்டின் கப்டிலின் விக்கெட் எடுத்து மிரள வைத்தார்.

ஆனால் மறுமுனையில் விளையாடிய ஆரம்ப வீரர் ரொப் நிக்கொல் அடித்த பந்து அகிலவின் முகத்தை தாக்கியது. இதனால் அவர் மைதானத்தில் விழுந்து நிலைகுலைந்ததுடன், அதைப் பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

எந்தவொரு முதல்தரப் போட்டிகளிலும் விளையாடாமல் தான் விளையாடிய முதல் சர்வதேசப் போட்டியிலேயே இவ்வாறானதொரு சம்பவத்துக்கு அகில தனன்ஜய முகங்கொடுத்தது இலங்கை ரசிகர்களுக்கு மாத்திரமல்லாது, உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது.

இருப்பினும், சர்வதேச போட்டிகளில் தன்னால் விளையாட முடியும் என்பதை பறைசாற்றும் வகையில் வலியுடனும், கடுமையான முகத்துடனும் மீண்டும் பந்துவீசிய அகில, தன்னைக் காயப்படுத்திய ரொப் நிக்கொல்லின் விக்கெட்டை அடுத்த ஓவரிலேயே எடுத்தார்.

எனவே, குறித்த போட்டியில் 4 ஓவர்களை பந்துவீசிய அகில, 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

எவ்வாறாயினும், குறித்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்களில் 174 ஓட்டங்களைப் பெற போட்டி சமநிலை அடைந்தது. ஆகவே, போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க சுப்பர் ஓவர் பந்துபரிமாற்றம் முன்னெடுக்கப்பட்ட, அதில் இலங்கை அணி வெற்றியீட்டியது.

இந்தப் போட்டிக்குப் பிறகு இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்குத் தெரிவாகியது.

இதில் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் மீண்டும் களமிறங்கிய அகில தனன்ஜய, இயென் மோர்கன் மற்றும் ஸ்டுவர்ட் பிரோட் ஆகிய இருவரினதும் விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

T20 உலகக் கிண்ணம் 2009; ‘DilsCoop’ மன்னன் டில்ஷானின் பொற்காலம்

இதனிடையே, 2012 T20 உலகக் கிண்ணத் தொடரில் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 16 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி, இரண்டாவது தடவையாக T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

எனினும், குறித்த போட்டியில் இலங்கை அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்களாக அஜந்த மெண்டிஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய இருவரும் விளையாடிய காரணத்தால் அகில தனன்ஜயவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதிப் போட்டியில் ரங்கன ஹேரத்துக்குப் பதிலாக அகில தனன்ஜய இலங்கை அணியில் விளையாடியதுடன், அதில் அவர் 3 ஓவர்கள் பந்துவீசி 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

எனினும், துரதிஷ்டவசமாக இலங்கை அணி தோல்வியைத் தழுவினாலும், போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற மார்லன் சாமுவேல்ஸின் விக்கெட்டை அகில தனன்ஜய கைப்பற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, அஜந்த மெண்டிஸ், ரங்கன ஹேரத், ஜீவன் மெண்டிஸ் போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணியில் இடம்பிடித்த போதிலும், மஹேல ஜயவர்தன கொடுத்த 3 வாய்ப்புகளிலும் அவர் சிறப்பாக பந்துவீசியிருந்ததுடன், 5 விக்கெட்டுக்களையும் எடுத்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டதுடன், மஹேலவின் நம்பிக்கையையும், மனைதையும் வென்றார்.

உண்மையில் 2021 T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதில் மஹேல ஜயவர்தனவின் முக்கிய துரும்புச் சீட்டுக்களில் ஒன்றாக அகில தனன்ஜய இருந்தார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…