இலங்கைக்கு SAFF இறுதிப் போட்டி கனவாக அயைவுள்ள இந்திய மோதல்

SAFF Championship 2021

476

கடந்த இரண்டு போட்டிகளிலும் பெற்ற அதிர்ச்சியான முடிவுகளின் பின்னர் தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான கனவுக்காக, முக்கிய மோதலில் வியாழக்கிழமை இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது இலங்கை அணி.

முதல் போட்டியில் பங்களாதேஷிடம் தோல்வி கண்ட இலங்கை வீரர்கள், தமது இரண்டாவது போட்டியில் கட்டாய வெற்றியொன்றுக்காக நேபாள அணியை திங்கட்கிழமை (04) எதிர்கொண்டது. எனினும், இந்தப் போட்டியில் இறுதிவரை போராடிய இலங்கை அணி 3-2 என தோல்வியடைந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (07) மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ள அடுத்த போட்டியில், இம்முறை SAFF சம்பியன்ஷிப் கிண்ணத்தை வெல்லும் என்று பலராலும் எதிர்பாரக்கப்படுகின்ற இந்திய அணியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

எனினும், இறுதியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய பங்களாதேஷ் அணி, 10 வீரர்களுடன் விளையாடி 1-1 என போட்டியை சமன் செய்தது. அதே போன்றுதான், நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர்கள் வெளிப்படுத்திய ஆக்ரோசமான ஆட்டம் வீரர்களிடையே ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய – இலங்கை இடையிலான போட்டி முடிவுகள்

மோதியுள்ள போட்டிகள் – 16

இலங்கை வெற்றி – 03

இந்தியா வெற்றி – 09

சமநிலை – 04

கடந்த கால மோதல்களைப் பார்க்கின்றபோது இலங்கைக்கு எதிராக இந்தியா வலுவாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து இந்தியா – இலங்கை இடையே இடம்பெற்றுள்ள 4 மோதல்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

இறுதியாக இவ்விரு அணிகளுக்கும் இடையில் 2008ஆம் அண்டு இடம்பெற்ற SAFF சம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

இலங்கை அணி

இலங்கை அணிக்கு அடுத்து இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகளும் (இங்தியா, மாலைதீவுகள்) மிக முக்கியமானவை. இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் என்றால் கட்டாயம் அடுத்த இரண்டு போட்டிகளையும் இலங்கை வெல்ல வேண்டும். இவ்வாறு வென்றாலும், ஏனைய அணிகளின் முடிவுகளில் இலங்கையின் இறுதிப் போடிக்கான வாய்ப்பு தங்கியிருக்கின்றது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில், இம்முறை SAFF சம்பியன்ஷிப் தொடரில் தமது முதல் போட்டியில் விளையாடிய விதத்தைவிட முழுமையான ஒரு மாற்றமான ஆட்டத்தையே இரண்டாவது போட்டியில் காண்பித்தது.

சுஜான் பெரேரா

குறிப்பாக, பேங்களாதேஷ் அணிக்கு எதிராக கூடுதலான தடுப்பாட்டத்தை மேற்கொண்ட இலங்கை அணி, நேபாளத்திற்கு எதிராக தாக்குதல் ஆட்டம் ஒன்றை காண்பித்து, அதில் வெற்றியும் கண்டது. இலங்கை வீரர்களின் இந்த உத்வேகம் இந்தியாவுடன் இருக்கும் என்றால், இலங்கைக்கு நிச்சயமாக இந்த தொடரில் முதல் வெற்றியை பெற முடியும்.

அவதானிக்கப்பட வேண்டியவர்கள்

பலம் மிக்க இந்திய அணியை எதிர்கொள்ள இலங்கை அணி சில நுட்பங்களை கையாள்வது முக்கியம். எனவே, அனுபவ ரீதியில் அணியின் தலைவர் சுஜான் பெரேராவிற்கு மிகப் பாரிய பொறுப்புக்கள் உள்ளன. ஏற்கனவே, கடந்த போட்டியில் மிகச் சிறந்த தடுப்புக்களை மேற்கொண்ட சுஜானுக்கு இந்தியாவில் உள்ள முன்னணி வீரர்களின் சவால்களை முறியடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.

அதேபோன்று, இலங்கை அணி இறுதியாக தாம் விளையாடிய போட்டிகளில் பெற்ற அனைத்து கோல்களையும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடிய வீரர்களான வசீம் ராசிக், மார்வின் ஹமில்டன் மற்றும் டிலன் டி சில்வா ஆகியோர் மூலமே பெற்றது. எனவே, இந்த 3 வீரர்களும் இந்திய அணியினரால் இலக்கு வைத்து தடுக்கப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்திய அணிக்கு எதிராக இலங்கை வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொள்ள முயற்சிக்கும் அதேவேளை, பின்களத்திலும் மத்திய களத்திலும் வலுவாக இருக்க வெண்டும். அது போன்றே, கடைசி இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் பின்கள வீரரான விளையாடிய ஷமோத் டில்ஷான் இரண்டு மஞ்சள் அட்டைகள் பெற்றுள்ளமையினால் அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

எனவே, முதல் போட்டியில் சிவப்பு அட்டை பெற்று நேபாள அணியுடனான போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸ் மற்றும் ஷரித்த ரத்னாயக்க ஆகியோர் மீது இந்தப் போட்டியில் பணிச்சுவை அதிகரிக்கப்படுகின்றது.

போட்டி முழுவதும் மத்திய களத்தில் சுனில் ஷெத்ரியை தடுக்கும் பொறுப்பு மார்வின் ஹமில்டனுக்கு கொடுக்கப்படுமென்றால் இலங்கையின் பின்கள வீரர்களுக்கு நேரடியாக எழும் அழுத்தம் குறையும்.

இலங்கை அணியின் இறுதி 5 போட்டிகள்

2-3 எதிர் நேபாளம்

0-1 எதிர் பங்களாதேஷ்

0-5 எதிர் தென் கொரியா

2-3 எதிர் லெபனான்

0-2 எதிர் துர்க்மெனிஸ்தான்

இந்திய அணி

இந்திய அணிக்கு இந்தப் போட்டி அதிக சவால் கொண்ட போட்டியாக அமையும். காரணம், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி முடிவு அவர்களுக்கு அதிர்ச்சியை மட்டுமின்றி ஏமாற்றத்தையும் கொடுத்திருந்தது.

எனவே, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரிக்க அவர்களுக்கு இலங்கைக்கு எதிரான ஆட்டம் வெற்றிக்கான முக்கிய ஆட்டமாகப் பார்க்கப்படுகின்றது. எனவே, அவர்கள் இலங்கை அணியின் பின்களத்தில் இருக்கின்ற குறைகளை இனங்கண்டு அதில் பயன்பெற முயற்சிப்பர்.

சுனில் ஷெத்ரி

ஏனைய அனைத்து SAFF அணிகளுடனும் ஒப்பிடும்போது பிபா தரவரிசையில் 105ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி மிகச் சிறந்த அணியாக உள்ளது. எனினும், கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணியுடன் இணைந்த இகொர் ஸ்டிமெக்கின் பயிற்றுவிப்பில் இந்திய அணி அண்மைக்காலமாக திருப்தி காணும் அளவில் பெறுபேறுகளைப் பெறவில்லை என்றே கூறலாம்.

குறிப்பாக, அந்த அணி வெற்றிகளைப் பெற்றாலும் இந்திய வீரர்கள் களத்தில் ஆடும்போது பல தடுமாற்றங்களை எதிர்கொள்வதை எம்மால் காண முடியுமாக இருந்தது.

அவதானிக்கப்பட வேண்டியவர்கள்

இந்திய அணியில், இந்தப் போட்டியில் மாத்திரமன்றி இந்த தொடரிலேயே முக்கிய வீரராகப் பாரக்கப்படுகின்றவர், அணியின் தலைவர் சுனில் ஷெத்ரி. சர்வதேச கால்பந்து அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அதிக கோல் பெற்ற வீரருக்காக போட்டி போடும் இவரின் ஆற்றல் இலங்கை அணியின் மத்திய களம், பின்களம் மற்றும் கோல் காப்பாளருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும்.

இவருடன் முன்களத்தில் உள்ள மற்றொரு அனுபவ வீரர்தான் மன்விர் சிங். கோல் பெறுவதை விட கோலுக்கான உதவிகளை வழங்குவதில் இவர் மிகவும் தேர்ச்சியானவர். இவரது பங்களிப்பு சுனில் ஷெத்ரிக்கு மாத்திரமின்றி அனிருத் தாபா மற்றும் பிலக் மார்டின்ஸ் ஆகியோருக்கு கோல் பெற அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

மன்விர் சிங்

குறிப்பாக, மேலே குறிப்பிட்டுள்ள 4 வீரர்களையும் கட்டுப்படுத்துவது இலங்கை அணிக்கு முக்கிய பணியாக இருக்க வேண்டும். அது போன்றே, அனுபவம் கொண்ட பின்கள வீரர்களான ஜிங்க்லன்செனா சிங் மற்றும் சிரேஷ்ட வீரர் ராஹுல் பேக் ஆகியோரை கடந்து இலங்கை முன்கள வீரர்கள் கோலுக்குள் செல்வது என்பது மிகவும் கடினமான விடயம்.

இந்திய அணியின் இறுதி 5 போட்டிகள்

1-1 எதிர் பங்களாதேஷ்

2-1 எதிர் நேபாளம்

1-1 எதிர் நேபாளம்

1-1 எதிர் ஆப்கானிஸ்தான்

2-0 எதிர் பங்களாதேஷ்           

இறுதியாக,

எனவே, இந்த போட்டியானது இரண்டு அணிகளுக்கும் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்வதற்கான முதல் போட்டி. எனவே, ஆட்டத்தின் 90 நிமிடங்கள் உட்பட உபாதையீடு நேரம் வரை போராட்டம் தொடரும்.

முதல் பாதியில் இலங்கை அணி எதிரணிக்கு கோல் கொடுக்காமல் இருப்பது, இரண்டாவது பாதியில் ஆட்டத்தை தாக்குப் பிடிப்பது என அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் பட்சத்தில் மாலைதீவுகள் தேசிய கால்பந்து அரங்கில் இந்த தொடரின் முதல் வெற்றிக்கான பாதையை இலங்கைக்கு ஏற்படுத்தலாம்.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<