T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில், இலங்கை கிரிக்கெட் அணிக்கும் ரசிகர்களுக்கும் பல மறக்கமுடியாத ஞாபகங்கள் கொட்டிக்கிடந்தாலும், ஒரேயொரு நினைவு என்றும் மறப்பதற்கு வாய்ப்பில்லை.
அந்தவகையில், 1996ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெற்றிக்கொண்ட பின்னர், இலங்கை அணிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம், 2014ம் ஆண்டு T20 உலக்கிக்கிண்ணம்.
மஹேல அணியுடன் இணைவது மிகப்பெரிய பலம்: தசுன் ஷானக
பலமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதும், நீண்டகால முயற்சிக்கு பின்னர் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்தது மாத்திரமின்றி, இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய விதம் இலங்கை ரசிகர்களால் என்றுமே மறக்கமுடியாது.
இறுதிப் போட்டியொன்றில், இந்திய அணியை வீழ்த்துவது இலகுவான விடயமல்ல என்பது இலங்கைக்கு தெரியும். இந்தியா துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகவும் சம பலம் வாய்ந்ததாக இருந்ததுடன், அவர்களின் முந்தைய போட்டிகளின் பிரகாசிப்புகள், அவர்களின் பலத்தை மேலும் உயர்த்தியிருந்தன.
இந்திய அணி லீக் போட்டிகளில் குறைந்த ஓட்டங்களை பெற்று, பந்துவீச்சாளர்களின் அசத்தல் பிரகாசிப்புகளுடன் வெற்றியை பதிவுசெய்திருந்த போதும், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 176 ஓட்டங்களை குவித்து ஓட்டங்களை பெறுவதிலும் ஆதிக்கத்தை காட்டியிருந்தது.
எனவே, இதற்கேற்ப இலங்கை அணியின் திட்டங்கள் மிகவும் தெளிவாக உருவாக்கப்பட்டிருந்தன. ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று கடினமாக இருந்தமையால், சரியான வெற்றியிலக்கு ஒன்றை நிர்ணயிப்பது சிறந்த திட்டமாக இருக்காது. அத்துடன், இந்திய அணி வெற்றியிலக்குகளை அடைவதை விரும்பும் அணி. எனவே, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட வைக்கவேண்டும் என்பதே பிரதான திட்டம்.
இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க இருந்ததால், ஓவர்கள் தொடர்பிலான சிறந்த நோக்கம் அவரிடம் காணப்பட்டது. அதற்கான திட்டங்களும் சக பந்துவீச்சாளர்களுடன் பரிமாறப்பட்டதுடன், திட்டங்கள் சரியாக நகர்த்தப்படவேண்டும் என்ற எண்ணம் இலங்கை அணியிடம் முழுமையாக இருந்தது.
பங்களாதேஷின் டாக்காவில் இறுதிப் போட்டி ஆரம்பமானது. இலங்கை அணி நினைத்ததைப்போன்று, நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதுடன், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. நாணய சுழற்சியில் வெற்றி கிடைத்தாலும், போட்டியின் நகர்வில் பெரிதாக வெற்றிகள் இல்லை.
அஞ்செலோ மெதிவ்ஸ், ரஹானேவின் விக்கெட்டினை இரண்டாவது ஓவரில் கைப்பற்றினாலும், விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 60 ஓட்டங்களை பகிர்ந்தனர். ரோஹித்தின் விக்கெட்டினை வீழ்த்தி, ரங்கன ஹேரத் போட்டியின் திசையை மாற்றினார்.
தொடர்ந்து வருகைத்தந்த யுவராஜ் சிங் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு தடுமாறத்தொடங்கினார். ஆனால், மறுபக்கம் விராட் கோஹ்லி, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் பௌண்டரிகளை விளாசி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டிருந்தார்.
இலங்கை அணியின் திட்டங்கள் சரியாக செயற்படுத்தப்படாமல், ஓட்டங்கள் விட்டுக்கொடுக்கப்பட்டன. விக்கெட்டுகள் வரவில்லை. அழுத்தம் இலங்கை அணி பக்கம் மீண்டும் திரும்பியது. ஒருகட்டத்தில் நுவான் குலசேகர வீசிய 15வது ஓவரில் 16 ஓட்டங்கள் விளாசப்பட, இந்திய அணி 16 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, 111 ஓட்டங்களை பெற்றிருந்தது.
மீதமுள்ள 4 ஓவர்களில் இந்திய அணியை கட்டுப்படுத்தாவிட்டால், ஓட்ட எண்ணிக்கையானது, இலங்கை அணியின் திட்டத்தை விடவும் கடந்துவிடும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டது.
எனவே, இலங்கை அணியின் பந்துவீச்சு திட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக மாற்றப்பட்டது. 17வது ஓவரை வீச, சச்சித்ர சேனாநாயக்க அழைக்கப்பட்டார். இறுதி தருணங்களில் சுழல் பந்துவீச்சாளர்களை அழைப்பதென்பது, மிகவும் தைரியமான தீர்மானமாகும். ஆனால், குறித்த தீர்மானம் இலங்கைக்கு சாதகமாகியது. சச்சித்ர சேனாநாயக்க மூன்று ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுக்க, இந்திய அணி 17 ஓவர்களில் 114 ஓட்டங்கள்.
கடைசி மூன்று ஓவர்களில், மாலிங்க இரண்டு ஓவர்கள் மற்றும் நுவான் குலசேகர ஒரு ஓவர். இதுதான் இலங்கை அணியின் திட்டம். விராட் கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் களத்தில், சிக்ஸர்களை விளாச தயாராகியிருந்தனர். யுவராஜ் சிங் ஓட்டங்களை பெறுவதில் தடுமாறினாலும், ஒரு ஓவரில் போட்டியை மாற்றக்கூடிய வீரர். எனவே, இறுதி ஓவர்களின் அழுத்தம் இரண்டு அணிகளுக்கும் இருந்தது.
ஆனால், மிகப்பெரிய தொடர் ஒன்றின் இறுதிப்போட்டியில், மிகச்சிறந்த “டெத் ஓவர்களை” பார்க்கக்கூடிய வாய்ப்பு சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு அன்று கிடைத்தது.
அணியின் 18வது ஓவரை வீசிய லசித் மாலிங்க, அடுத்தடுத்த யோர்க்கர் பந்துகளால், கோஹ்லி மற்றும் யுவராஜிற்கு நெருக்கடியை கொடுத்தார். வைட் யோர்க்கர்கள் மற்றும் யோர்க்கர்கள் என மாலிங்கவின் இலக்கு யோர்க்கர்களாகவே, இருந்தன. துடுப்பாட்ட வீரர்கள், அடுத்த பந்து யோர்க்கர்தான் என அறிந்தும், அவர்களால் பௌண்டரிகளை பெறமுடியவில்லை. 17வது ஓவரில் 4 ஓட்டங்கள் மாத்திரமே.
அடுத்ததாக தன்னுடைய 16வது ஓவரில் 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த, நுவன் குலசேகர பந்துவீச ஆரம்பித்தார். முதல் பந்தில் யுவராஜ் ஆட்டமிழக்க, டோனி களமிறங்கினார். ஆனால், மாலிங்க விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, 4 வைட் யோர்க்கர் பந்துகளை குலசேகர வீசியதுடன், இறுதிப்பந்து, தோனியின் காலில் யோர்க்கர் பந்தாக விழுந்தது. இந்த ஓவருக்கும், வெறும் 4 ஓட்டங்கள்.
இறுதி ஓவரை வீசுவதற்கு மாலிங்க வருகின்றார். உலகின் தலைசிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர், உலகின் தலைசிறந்த பினிஸராக வர்ணிக்கப்படும் டோனியுடன், விராட் கோஹ்லியை சந்தித்தார். முதல் ஐந்து பந்துகளும் அற்புதமான யோர்க்கர்களாக அமைய, டோனியால் நம்பிக்கையுடன் துடுப்பாட்ட மட்டையில் பந்துகளை அடிக்க முடியவில்லை. முதல் ஐந்து பந்துகளில் டோனி மூன்று ஓட்டங்களை மாத்திரமே பெற, மாலிங்கவால் வைட் பந்து ஒன்று வீசப்பட்டது. தொடர்ந்து, இறுதிப்பந்தில் கோஹ்லி களம் காண, அவருக்கும் மாலிங்கவின் யோர்க்கர், அவருக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.
விராட் கோஹ்லியால் ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெறமுடிந்த நிலையில், இரண்டாவது ஓட்டத்தை பெறுவதற்கு முயற்சித்த போதும், ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார்.
சர்வதேசத்தில் முக்கியமான உலகக் கிண்ண இறுதிப்போட்டிகளில், இவ்வாறான பந்துவீச்சை இதற்கு முன்னர், எவருமே பார்த்திருக்கவில்லை. 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்தாலும், 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
கடைசி 4 ஓவர்களில் வெறும் 19 ஓட்டங்களை மாத்திரமே இந்திய அணி பெற்றதுடன், T20 போட்டிகளில் பெறப்பட்ட மிக அறிதான துடுப்பாட்ட சறுக்கல்கலை இந்திய அணி சந்தித்தது. அதிலும், கடைசி 4 ஓவர்களில் ஒரு பௌண்டரியும் இல்லை என்பது, இலங்கையின் அற்புதமான பந்துவீச்சை வெளிக்காட்டியது.
விக்கெட்டுகளை வீழ்த்தாமல், முன்னணி துடுப்பாட்ட வீரர்களை களத்தில் வைத்து, இலங்கை அணி ஓட்டங்களை கட்டுப்படுத்திய விதம் மிகவும் அற்புதமான ஒன்றாகும்.
அதிலும், அந்த “வைட் யோர்க்கர்கள்” துள்ளியமானவை. எனவேதான், மாலிங்க மற்றும் குலசேகரவின் இந்த டெத் ஓவர்கள் மிகச்சிறந்த பந்துவீச்சு இணைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுவதுடன், இலங்கை அணி T20 உலகக்கிண்ணத்தை வெல்வதற்கு மிக முக்கியமான அஸ்திரங்களில் ஒன்றாகவும் இன்றளவிலும் பேசப்பட்டு வருகின்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<