ஐந்தாவது பருவகாலத்திற்கான அபுதாபி T10 லீக் தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், இந்த தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி தமது வீரர் குழாத்தில் இலங்கையின் இளம் நட்சத்திர சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்கவினை தொடர்ந்தும் தக்க வைத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
சனத்தின் அதிரடியோடு T20 உலகக் கிண்ணத்தில் உலக சாதனை படைத்த இலங்கை
அதேநேரம், வனிந்து ஹஸரங்கவுடன் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி இங்கிலாந்தின் வேகப்பந்து சகலதுறைவீரரான டைமால் மில்ஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஷஹுர் கான் ஆகியோரினை தொடர்ந்தும் தக்க வைத்திருப்பதாகவும் கூறியிருக்கின்றது. டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் நட்சத்திரவீரராக மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறைவீரரான அன்ட்ரே ரசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
T20 போட்டிகளில் முன்னணி பந்துவீச்சாளராக திகழும் வனிந்து ஹஸரங்க தற்போது இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இதேநேரம், வனிந்து ஹஸரங்க அண்மையில் இந்திய அணியினை முதல் தடவையாக T20 தொடர் ஒன்றில் வீழ்த்துவதற்கும் இலங்கை அணிக்கு சிறந்த முறையில் பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக தொடர்ச்சியாக திறமையினை வெளிப்படுத்தி வரும் சிறப்பான சகலதுறை வீரர்களில் ஒருவரான வனிந்து ஹஸரங்கவினை தமது அணிக்காக தொடர்ந்தும் ஆட வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர் திரு. கௌரவ் குருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
மாயஜாலம் செய்து இலங்கையின் உலகக் கிண்ண கனவினை நனவாக்கிய ஹேரத்
மறுமுனையில் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியினால் தொடர்ந்து தக்கவைக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் வனிந்து ஹஸரங்க, தனது துடுப்பாட்டமும், பந்துவீச்சும் T10 போட்டிகளுக்கு பொருந்தும் வகையில் அமைந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டிருப்பதோடு, டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியில் இணைவது அன்ட்ரே ரசல் போன்ற முன்னணி வீரர்களுடன் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பினை தந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
அதோடு, டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியில் ஆடுவது அதன் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் தனது சிறுவயது ஹீரோவான மணிக்கட்டு சுழல் ஜாம்பவான் முஸ்தாக் அஹ்மட்டிடம் கற்றுக்கொள்வதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு என்றும் வனிந்து ஹஸரங்க கருத்து வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது பருவகாலத்திற்கான அபுதாபி T10 லீக் தொடரின் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<