இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் A அணி அறிவிப்பு

462

இலங்கைக்கு இம்மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் A கிரிக்கெட் அணியின் விபரத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் இளம் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராள சவுத் சகீல் தலைமையில் 19 பேர் பாகிஸ்தான் A அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் இடம்பெற்றிருந்தார்.

அத்துடன், பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடியுள்ள அப்துல்லாஹ் சபீக், அர்ஷாத் இக்பால், ஹைதர் அலி, நசீம் ஷா, உஸ்மான் சலாஹுதீன் மற்றும் சாஹிட் மஹ்மூத் ஆகிய வீரர்கள் இலங்கை வரும் பாகிஸ்தான் A கிரிக்கெட் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும், அடுத்த வருடம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண போட்டிகளை இலக்காகக் கொண்டு இளம் விக்கெட் காப்பாளர் சல்மான் கான் மற்றும் முன்வரிசை வீரரான காசீம் அக்ரம் ஆகிய இருவரும் பாகிஸ்தான் A கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெற்றுள்ள 19 வீரர்களில், 14 பேர் இருவகை தொடர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் (ஓமைர் பின் யூசுப், உஸ்மான் சலாஹுதீன், அஹ்மட் சாபி அப்துல்லாஹ்) இலங்கை A அணிக்கெதிராக நடைபெறவுள்ள நான்கு நாட்கள் கொண்ட போட்டிளுக்கு மாத்திரம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை A அணிக்கெதிரான தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி பற்றி அந்நாட்டு தேர்வுக்குழு உறுப்பினர் முஹம்மட் வசீம் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வாறான கிரிக்கெட் தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை ஊக்கப்படுத்துவது தான் எமது பிரதான குறிக்கோளாக உள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு சிறந்த முதலீடாக அமையும். அதேபோல, அணியில் மேலதிக வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

குறிப்பாக, இலங்கை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் 22 வயதுக்குட்பட்டவர்கள். இதில் ஒருசிலர் பாகிஸ்தான் தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ளார்கள்.

எனவே, இலங்கை A அணியுடனான தொடரின் மூலம் பாகிஸ்தான் தேசிய அணிக்குத் தேவையான இளம் வீரர்களை எம்மால் இனங்கண்டு கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி பாகிஸ்தான் A அணி இலங்கையை வந்தடையவுள்ளது. அதன்பிறகு ஒக்டோபர் 28ஆம் திகதி முதலாவது நான்கு நாள் போட்டியும், நவம்பர் 4ஆம் திகதி இரண்டாவது நான்கு நாள் போட்டியும் நடைபெறும். இந்த இரண்டு போட்டிகளும் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து நவம்பர் 10, 12 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும்.

பாகிஸ்தான் A அணி விபரம்

சவுத் சகீல் (தலைவர்), ஹைதர் அலி (உப தலைவர்), அப்துல்லாஹ் சபீக், அப்ரார் அஹ்மட், அப்பாஸ் அப்ரிடி, அஹ்மட் சாபி அப்துல்லாஹ், ஆகிப் ஜாவித், அர்ஷாத் இக்பால், இர்பானுல்லாஹ் ஷா, கம்ரான் குலாம், குர்ராம் ஷாஹ்சாத், மொஹமட் ஹாரிஸ், நசீம் ஷா, ஓமைர் பின் யூசுப், காசிம் அக்ரம், சல்மான் அலி அகா, சல்மான் கான் (விக்கெட் காப்பாளர்), உஸ்மான் சலாவுதீன் மற்றும் சாஹித் மஹ்மூத்.

பாகிஸ்தான் பயிற்சியாளர் விபரம்

இஜாஸ் அஹமட் (தலைமைப் பயிற்சியாளர் மற்றும் முகாமையாளர்), ராஓ இப்திகார் (உதவிப் பயிற்சியாளர்), மொஹ்தசிம் ராஷித் (களத்தடுப்பு பயிற்சியாளர்), மொஹம்மட் ஜாவிட் (உடற்கூற்று பயிற்றுநர்), பைஸால் ராய் (தரவு ஆய்வாரளர்), ஹாபிஸ் நயீம் (உடற்கூற்று நிபுணர்)

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…