இந்தியன் பிரியீமியர் லீக் (IPL) உயிரியல் பாதுகாப்பு வலயத்திலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ண தொடருக்காக, உளவியல் ரீதியாக தயாராகும் முகமாக, கெயில் அணியிலிருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வணிக கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராகும் நலின் விக்ரமசிங்க
பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட உயிரியல் பாதுகாப்பு வலய சோர்வு காரணமாக, கிரிஸ் கெயில் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் உயிரியல் பாதுகாப்பு வலயத்திலிருந்து, கிரிஸ் கெயில் IPL உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இணைந்துக்கொண்டார். எனவே, அவர் தன்னை மனதளவில் T20 உலகக்கிண்ணத்துக்கு தயார்படுத்திக்கொள்ள, அணியிலிருந்து வெளியேறியுள்ளார்” குறிப்பிடப்பட்டுள்ளது.
அணியிலிருந்து வெளியேறுவது குறித்து கிரிஸ் கெயில் குறிப்பிடுகையில்,
“நான் கடந்த சில மாதங்களாக CPL உயிரியல் பாதுகாப்பு வலயம், மேற்கிந்திய தீவுகள் உயிரியல் பாதுகாப்பு வலயம் மற்றும் IPL உயிரியல் பாதுகாப்பு வலயம் என தொடர்ந்து இருந்து வருகின்றேன். எனவே, T20 உலகக்கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உதவுவதற்காக, என்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். எனவே, சற்று ஓய்வை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
அதுமாத்திரமின்றி, “எனக்கு இந்த ஓய்வுக்கான நேரத்தை கொடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது நம்பிக்கை மற்றும் ஆதரவு எப்போதும், பஞ்சாப் குழாத்துக்கு இருக்கும். அடுத்துவரும் போட்டிகளுக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
கிரிஸ் கெயில், ஐ.பி.எல். இரண்டாவது கட்டப்போட்டிகளில், இரண்டு போட்டிகளில் விளையாடி, 15 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<