மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் நட்சத்திர ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக வலதுகை வேகப் பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
IPL தொடரின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்த பருவத்திற்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்திருந்தார். இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.
இதனிடையே, டுபாயில் சக அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டிருந்த அவர் தற்போது காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக 23 வயதுடைய இளம் வேகப் பந்துவீச்சாளர் சிமர்ஜீத்; சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
- IPL இல் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள்
- IPL இல் ரோஹித் சர்மா புதிய சாதனை
- IPL இல் புதிய மைல்கல்லை எட்டிய கோஹ்லி, ஹர்ஷல்
கடந்த 2018இல் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் டெல்லி அணியில் அறிமுகமான இவர், இதுவரை 10 முதல்தரப் போட்டிகள் (37 விக்கெட்), 19 ‘லிஸ்ட் ஏ’ போட்டிகள் (19 விக்கெட்), 15 T20 (18 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அத்துடன், இறுதியாக நடைபெற்ற விஜய் ஹசாரே கிண்ணப் போட்டியில் (2020–21) டெல்லி அணிக்காக விளையாடி 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
இதனிடையே, அண்மையில் நடைபெற்ற இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த சிமர்ஜீத் சிங், IPL வழிகாட்டுதலின்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மும்பை அணியில் இணைந்து பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”காயமடைந்துள்ள அர்ஜுன் டெஸ்டுல்கருக்குப் பதிலாக சிமர்ஜீத் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்திக் கொண்ட அவர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்” என தெரிவித்திருந்தது.
இதேவேளை, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி மற்றும் 6 போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணி தனது அடுத்த போட்டியில் டெல்லி அணியை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி எதிர்கொள்கிறது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…