நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிக்களும் ஒரே நேரத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் IPL தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே-ஓப் சுற்றில் இடம்பெற அனைத்து அணிகளும் தீவிரமாகப் போராடி வருகின்றன.
சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் ஏறத்தாள பிளே-ஓப் சுற்றுக்கான வாய்ப்பை அண்மித்துள்ளன. இருப்பினும், அடுத்த இரண்டு இடங்களுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
சராசரி ஓட்டவேகம் தான், இந்த இரண்டு இடங்களையும் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் எனக் கூறப்படுவதால், அடுத்தடுத்த போட்டிகளில் மீதமுள்ள 6 அணிகளும் அதிக ஓட்டங்கள், விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இம்முறை IPL தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகளும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளன.
இதில் அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகளும், அதே தினத்தன்று துபாயில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள கடைசி லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கெபிடல்ஸ் அணிகளும் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
- IPL இல் ரோஹித் சர்மா புதிய சாதனை
- சஞ்சு சம்சனுக்கு மீண்டும் அபராதம்
- IPL இல் புதிய மைல்கல்லை எட்டிய கோஹ்லி, ஹர்ஷல்
ஆனால், IPL வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகளும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி, இரண்டு போட்டிகளும் ஒக்டோபர் 8ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி இரண்டு லீக் போட்டிகளின்போது அணிகளின் சராசரி ஓட்டவேகம் முக்கியமானதாகப் பார்க்கப்படும். குறுகிய ஓவருக்குள் இத்தனை ஓட்டங்கள் அடித்தாக வேண்டும் என்ற நெருக்கடி கடைசிப் போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்படும்.
எனவே, இந்த அழுத்தத்தையும், பதற்றத்தைத் தவிர்க்கவே கடைசி இரண்டு லீக் போட்டிகளையும் ஒரே நேரத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<