T20 உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிகளை அதிகரித்துள்ள இலங்கை

ICC Men’s T20 World Cup 2021

1875

ஓமான் தொடர் மற்றும் ஐசிசி T20 உலகக் கிண்ண தொடர்களுக்கான இலங்கை குழாம், தங்களுடைய பயிற்சிகளை மேலும் அதிகரித்துள்ளதாக எமது இணையத்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது.

ஓமான் தொடருக்காக செல்லவுள்ள இலங்கை அணி கடந்த 21ஆம் திகதி உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து மொயின் அலி ஓய்வு

தசுன் ஷானக தலைமையிலான இலங்கை குழாம் கடந்த 24ஆம் திகதி உடற்பயிற்சி கூடம் மற்றும் திறன் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது, அடுத்த மாதம் 3ஆம் திகதி ஓமானுக்கு புறப்படவுள்ள இலங்கை குழாம், மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். எனவே, இதற்கு முன்னதாக இலங்கை குழாம், உள்ளக குழாம்களுக்கு இடையிலான மூன்று இரவு நேர T20 பயிற்சிப்போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்காக 19 வீரர்கள் கொண்ட குழாம் (15 வீரர்கள், 4 மேலதிக வீரர்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3-0 என்ற தோல்விக்கு பின்னர், 5 மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக சகலதுறை வீரர் லஹிரு மதுஷங்க தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியின் போது உபாதைக்கு உள்ளானார். இதனால், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு மேலதிக வீரர்களாக மினோத் பானுக, லக்ஷான் சந்தகன், அஷேன் பண்டார, பெதும் நிஸ்ஸங்க மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இணைத்திருந்தனர்.

தற்போது, தேர்வுக்குழுவுக்கு சரியான வீரர்களை அணியில் இணைப்பதற்கு ஏழு போட்டிகள் எஞ்சியுள்ளன. மூன்று உள்ளக குழாம் பயிற்சிப் போட்டிகள், ஓமான் அணிக்கு எதிரான 2 T20I போட்டிகள் மற்றும் T20 உலகக் கிண்ணத்துக்கான 2 பயிற்சிப்போட்டிகள் உள்ளன. T20 உலகக் கிண்ணத்துக்கான இறுதி குழாம் அறிவிப்பு எதிர்வரும் 10ஆம் திகதி நிறைவுபெற்றாலும், உபாதையடைந்த வீரர்களுக்கான மாற்று வீரர்களை இதன் பின்னரும் இணைக்க முடியும்.

இலங்கை குழாத்தை பொருத்தவரை, தற்போது 20 வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குசல் பெரேரா, உபாதைக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றார். அதேநேரம், வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில், பெங்களூர் அணிக்காக விளையாடிவருகின்றனர்.

குசல் பெரேரா, எதிர்வரும் 12 மற்றும் 14ஆம் திகதிகளில் நடபெறவுள்ள இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ பயிற்சிப் போட்டிக்கு முன்னர், உடற்தகுதி அடைவார் என நம்பப்படுகிறது. ஒரு பயிற்சிப்போட்டி பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளதுடன், மற்றுமொரு பயிற்சிப் போட்டியில் ஸ்கொட்லாந்து அல்லது பபுவா நியூவ் கினியா அணியை, இலங்கை அணி எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றில், இலங்கை அணியானது அடுத்த மாதம் 18ஆம் திகதி நமீபியா, 20ஆம் திகதி அயர்லாந்து மற்றும் 22ஆம் திகதி நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…