இலங்கை U19 – பங்களாதேஷ் U19 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

Sri Lanka Cricket

348

இலங்கை 19 வயதின்கீழ் அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் 19 வயதின்கீழ் குழாம் அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதேநேரம், ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணையையும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

>> கைவிடப்பட்ட இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி 2022இல்!

அதன்படி, தொடருக்கான பங்களாதேஷ் 19 வயதின்கீழ் குழாம், அடுத்த மாதம் 7ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளதுடன், போட்டிகள் 15ஆம் திகதி ஆரம்பமாகின்றன. குறித்த இந்த போட்டிகள் கொவிட்-19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக, உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்கள் தொடர்பிலான விடயங்கள் அறிவிக்கப்படவில்லை என்பதுடன், முதல் ஒருநாள் போட்டி ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதி ஒருநாள் போட்டி ஒக்டோபர் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கை 19 வயதின்கீழ் அணி, ஏற்கனவே, 19 வயதின்கீழ் உலகக்கிண்ணம் மற்றும் அடுத்துவரும் தொடர்களுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளும் முகமாக, கொழும்பில் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இலங்கை 19 வயதின்கீழ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக உபுல் சந்தன, சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சச்சித் பத்திரன, துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக தம்மிக்க சுதர்சன மற்றும் வேகப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சமில கமகே ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.

பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி மற்றும் பாகிஸ்தான் A அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்த போதும்,  பங்களாதேஷ் 19 வயதின்கீழ் மற்றும் இலங்கை 19 வயதின்கீழ் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணையை இன்றைய தினம் (26) வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 15
  • 2வது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 18
  • 3வது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 20
  • 4வது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 23
  • 5வது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 25

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<