கொல்கத்தா அணித்தலைவர் மோர்கனுக்கு 24 இலட்சம் அபராதம்

Indian Premier League – 2021

558
Eoin Morgan

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயென் மோர்கன் மற்றும் அணியில் விளையாடிய ஏனைய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில், மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, குயிண்டன் டி கொக்கின் அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, ராகுல் திரிபதி மற்றும் வெங்கடேஷ் ஐய்யர் ஆகிய இருவரதும் அரைச் சதங்களின் உதவியால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

>> IPL இல் ரோஹித் சர்மா புதிய சாதனை

இந்த நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக நேரம் பந்துவீச எடுத்துக்கொண்டதால் கொல்கத்தா அணியின் தலைவர் இயென் மோர்கனுக்கும், அணியில் விளையாடிய ஏனைய வீரர்களுக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்க IPL நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அணித்தலைவர் மோர்கனுக்கு 24 இலட்சம் ரூபா அபராதமும், அணியில் விளையாடிய ஏனைய வீரர்களுக்கு ரூ. 6 இலட்சமும் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதம் (இந்த இரண்டில் குறைவான தொகை) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட IPL தொடரின் முதல் பாதியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது அதிக நேரம் பந்துவீச எடுத்துக்கொண்டதால் இயென் மோர்கனுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

>> ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு அபராதம்

தற்போது இரண்டாவது முறையாக இந்த தவறை மீண்டும் அவர் செய்துள்ளார். ஒருவேளை, இந்த தொடரிலேயே மீண்டும் ஒருமுறை கொல்கத்தா அணி தாமதமாக பந்துவீசினால் இயென் மோர்கனுக்கு 30 இலட்சம் ரூபா அபராதத்துடன், ஒரு போட்டியில் விளையாட தடை செய்யப்படுவார்.

முன்னதாக கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான 32ஆவது லீக் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாததால் ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<