கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வுபெற்றார் மைக்கேல் ஹோல்டிங்

288
Getty Image

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மிகச்சிறந்த வர்ணனையாளர்களில் ஒருவருமான மைக்கேல் ஹோல்டிங், வர்ணனைப் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

67 வயதான ஹோல்டிங் 1975 – 1987 வரையான காலப்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 391 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதன்பிறகு அவர் 1988 இல் கிரிக்கெட் வர்ணனை வாழ்க்கையைத் தொடங்கியதுடன், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணையாளராக பணியாற்றினார்.

எனவே, கடந்த 30 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையில் அரியபல நுணுக்கங்களையும், கிரிக்கெட்டுக்கான நுட்பங்களையும் கற்றுக் கொடுத்த மைக்கேல் ஹோல்டிங் கிரிக்கெட் வர்ணனைக்கு பிரியாவிடை கொடுப்பதாக இன்று உத்தியோகப்பூர்வமாக  அறிவித்துள்ளார்.

T20 தலைவர் பதவியிலிருந்து விலகினார் விராத் கோஹ்லி

வெளிப்படையான கருத்துகளாலும் இன, நிற வேறுபாடுகளுக்கு எதிரான தன்னுடைய வலுவான நிலைப்பாடுகளுக்காகவும் ரசிகர்கள் மத்தியில் அவருடைய வர்ணனைக்கு எப்போதும் ஆதரவும் இருக்கும்.

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வுபெற்ற ஹோல்டிங். கடந்த ஆண்டு வழங்கிய நேர்காணல் ஒன்றில், என்னுடைய வயதில் என்னால் பயணத்தில் எவ்வளவு காலம் ஈடுபட முடியும் எனத் தெரியவில்லை. எனக்கு இப்போது 66 வயதாகிறது. என்னுடைய வயது 36, 46, 56 எல்லாம் இல்லை என தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, கடந்த ஆண்டு அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் பிளாய்ட் விவகாரத்தை முன்வைத்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இனப்பாகுபாடு குறித்து ஹோல்டிங் பேசினார். கண்ணீருடன் நிறவெறி குறித்து தன்னுடைய கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார். இதற்கு சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன.

இதனிடையே, மைக்கேல் ஹோல்டிங்கின் ஓய்வுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<