T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இந்திய T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று விதமான போட்டிகளுக்கும் விராட் கோஹ்லி தலைவராக செயல்பட்டு வருகிறார். இதனால், அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்படுவதாகவும், ஐசிசியின் முக்கிய தொடர்களில் சம்பியன் பட்டத்தை இந்தியாவினால் வெற்றிகொள்ள முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வந்தன.
ICC T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு
இந்த நிலையில், தனது துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு T20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி இன்று (16) அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
“இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிஷ்டம். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
என்னுடைய அணி வீரர்கள், அணி நிர்வாகக் குழு, தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் மற்றும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது.
வேலைப்பளு என்பது மிக முக்கியமான விடயம் என்பதை புரிந்துகொள்கிறேன். கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக நான் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அதிக வேலைப்பளு இருப்பதை உணர்கிறேன்.
🇮🇳 ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021
அதேபோல, கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக அணியின் தலைவராக செயல்பட்டு வருவதாலும் வேலைப்பளு அதிகமாக உள்ளது. எனவே இந்திய அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்த எனக்கு சற்று வேலை குறைப்புத் தேவைப்படுவதாக நினைக்கிறேன். அதன்பொருட்டு ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருடன் T20 தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்.
நான் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு துடுபாட்ட வீரராக T20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
விராத் கோஹ்லியின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், தலைவர் நெருக்கடி இல்லாமல் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பையும் அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<