ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

369
Brendan Taylo

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரெண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அயர்லாந்து – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவதுடன், இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெல்பாஸ்ட்டில் இன்று (13) ஆரம்பமானது.

இந்த நிலையில், அயர்லாந்து அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரெண்டன் டெய்லர் நேற்று (12) அறிவித்திருந்தார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில்,

தாய்நாட்டுக்காக நான் ஆடும் கடைசிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது, இத்துடன் நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

கிரிக்கெட் எனக்கு எளிமையைக் கற்றுக் கொடுத்தது. அணியை நல்ல நிலையில் வைக்க வேண்டும் என்பதே என் இலட்சியமாக இருந்துள்ளது. 2004இல் வரும்போது அந்த எண்ணத்தில்தான் வந்தேன். இப்போது அதை நிறைவேற்றியதாகவே கருதுகிறேன்.

அத்துடன், இந்தப் பயணத்திற்காக எப்போதும் நன்றிக்குரியவனாக இருப்பேன். நன்றி“ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஏவ்வாறாயினும், தனது கடைசிப் போட்டியில் இன்று விளையாடிய பிரெண்டன் டெய்லர் 7 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.

ஜிம்பாப்வே அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான 35 வயதுடைய பிரெண்டன் டெய்லர், கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.

தற்போது வரை 34 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 45 T20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

>> அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் டேல் ஸ்டெய்ன் ஓய்வு

இதில் ஒருநாள் கிரிக்கெட்டில் 6,677 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர், ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த 2ஆவது ஜிம்பாப்வே வீரராக இடம்பிடித்துள்ளார். முதலிடத்தில் 6,786 ஓட்டங்களுடன் அண்டி பிளெவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இன்னும் 109 ஓட்டங்களை எடுத்தால் ஜிம்பாப்வே அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடிக்கின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும்.

அதுமாத்திரமின்றி, ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களைப் பெற்றுக்கொண்ட (11) ஜிம்பாப்வே வீரரும் இவர் தான்.

>> IPL தொடலிருந்து இங்கிலாந்தின் 3 வீரர்கள் திடீர் விலகல்

முன்னதாக 2011-2014 காலப்பகுதியில் ஜிம்பாப்வே அணியின் தலைவராகச் செயல்பட்டிருந்த பிரெண்டன் டெய்லர், 2015 உலகக் கிண்ணத்துக்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

அதன்பிறகு, கோல்பாக் ஒப்பந்தத்தின் படி இங்கிலாந்தின் நொட்டிங்ஹம்ஷெயார் அணிக்காக விளையாடினார். எனினும், 2017இல் ஜிம்பாப்வே அணியுடன் மீண்டும் அவர் இணைந்துகொண்டார்.

இதன்படி, தனது 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஜிம்பாப்வேயின் நட்சத்திர வீரரான பிரெண்டன் டெய்லர் விடைகொடுத்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<)