ICC இன் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர்கள் அறிவிப்பு

ICC Men's Player of the Month award - August

385

ஆகஸ்ட் மாதத்துக்கான ICC இன் சிறந்த வீரர் விருதுக்காக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சார்பில் இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறனர். 

கிரிக்கெட்டில் முதல்முறை ஸ்மார்ட் பந்து பயன்பாடு

இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை ICC வெளியிட்டது

இதன்படி, கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையிலான தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் மற்றும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவரும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் பிரகாசித்த பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடியும் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்

இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்களைக் குவித்து அசத்தியிருந்தார். குறிப்பாக, 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற முக்கிய காரணமாகவும் ஜோ ரூட் இருந்தார்

இதன்காரணமாக ஐசிசி இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடத்தை அவர் மீண்டும் பெற்றார்.

டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார் ஜோ ரூட்

இதேவேளை, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், துடுப்பாட்டத்தில் மொஹமட் ஷமியுடன் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்கள் எடுத்தார்.  

இந்தத் தொடரில் 16 விக்கெட்டுக்களை இதுவரை கைப்பற்றியுள்ள பும்ரா, அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

அதன்பிறகு, லோர்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் அவர் இருந்தார்.  

இதனிடையே கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடிய ஷஹீன் ஷா அப்ரிடி, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தலாக பந்துவீசி 18 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்

T20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அவர், டெஸ்ட் போட்டியொன்றில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் நான்காவது இளம் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.  

இதேவேளை, சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் தாய்லாந்தின் நட்டாயா பூச்சத்தாம் மற்றும் அயர்லாந்தின் கேபி லிவிஸ் மற்றும் ஈமர் ரிச்சர்ட்ஸன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்

எனவே, இதில் இருந்து விருதுக்குரிய வீர வீராங்கனையை முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<