T20 உலகக் கிண்ணத்திலிருந்து தமிம் இக்பால் திடீர் விலகல்

2615

பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், அவ்வணியின் நம்பிக்கைக்குறிய துடுப்பாட்ட வீரருமான தமிம் இக்பால், T20 உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக காலில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் காணொளியொன்றை வெளியிட்டு T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்

T20 போட்டிகளில் மீண்டும் குறைந்த ஓட்ட எண்ணிக்கையினைப் பதிவு செய்த நியூசிலாந்து

T20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

பங்களாதேஷ் ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவரான தமிம் இக்பால், கடந்த ஏப்ரல்மே மாதங்களில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது முழங்காலில் காயமடைந்தார்

இதையடுத்து மருத்துவ சிகிச்சைப் பெற்ற அவர், ஜிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலிய தொடர்களிலிருந்து விலகினார். இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் குணமடையாததால் அவர், இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்

இந்த நிலையில், அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக தனது காயம் குணமடைவது சந்தேகம் எனத் தெரிவித்து உலகக் கிண்ணத்திலிருந்து விலகுவதாக தமிம் இக்பால் அறிவித்துள்ளார்

T20 உலகக் கிண்ணத்தில் இருந்து விலகியமை தொடர்பில் தமிம் இக்பால் கருத்து வெளியிடுகையில்,

நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என்பதை தெளிவாகக் கூற விரும்புகிறேன். ஆனால், இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் நான் வி4ளையாட மாட்டேன். நான் எடுத்த முடிவில் எந்தவொரு தவறும் இல்லை என நினைக்கிறேன்

தேசிய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கின்ற இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனது தயார்படுத்தலைக் காட்டிலும் அவர்களை T20 உலகக் கிண்ணத்துக்கு தயார்படுத்துவது மிகவும் நல்லது. நிச்சயம் அவர்கள் அணிக்காக தமது பூரண பங்களிப்பை வழங்குவார்கள் என தெரிவித்தார்

எனக்குப் பதிலாக யார் விளையாடியிருந்தாலும் அவர்களுடைய இடத்தை எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. கிரிக்கெட் சபையின் தலைவர், தேர்வுக்குழுத் தலைவர் ஆகியோரிடம் இதுபற்றி பேசினேன்

நீண்ட நாட்களாக விளையாடாதது, காயம் ஏற்பட்டது போன்றவை இம்முடிவுக்கான முக்கிய காரணங்களாகும். எனினும் T20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடாமல் போனாலும் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அண்மைக்காலமாக தமிம் இக்பாலின் இடத்தில் சௌம்ய சர்கார், மொஹமட் நைம் ஆகிய வீரர்கள் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது 32 வயதாகும் தமிம் இக்பால் பங்களாதேஷ் அணிக்காக 78 T20 போட்டிகளில் விளையாடி 1,758 ஓட்டங்களைக் குவித்துள்ளார்

எனவே, பங்களாதேஷ் அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால், உலகக் கிண்ணத்தில் இடம்பெறாமை அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…